விஷாலின் ஆன்லைன் டிக்கெட் திட்டத்திற்கு திரையரங்கு உரிமையாளர்கள் கண்டிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ்திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் விஷால் நேற்று சங்கத்தின் சார்பில் ஒரு இணணயதளம் தொடங்கப்படும் என்றும் இனிமேல் அதன் மூலம் மட்டுமே ஆன்லைனில் டிக்கெட்டுக்கள் விற்பனை செய்யப்படும் என்றும் இதற்கு அனைத்து திரையரங்கு உரிமையாளர்களும் ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும் பேசியிருந்தார். இந்த திட்டத்திற்கு தயாரிப்பாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்ததாக கூறப்படும் நிலையில் இதுகுறித்து காஞ்சிபுரம் - திருவள்ளுர் மாவட்ட திரையரங்கு உரிமையாளர்களின் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திரையரங்குகளில் ஆன்லைன் மூலம் டிக்கெட் பதிவு செய்தால் அதற்கு ரூ.30 அதிகமாக வசூலிக்கிறார்கள். அதனால் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புதிதாக இணையதளம் ஒன்று தொடங்கி ரூ.10 வசூலிக்கப் போவதாக திரு.விஷால் அவர்கள் கூறியிருக்கிறார். திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் யாரிடமும் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக அறிவித்துள்ளார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் நேற்று நடைபெற்ற காஞ்சிபுரம் - திருவள்ளுர் மாவட்ட திரையரங்கு உரிமையாளர்களின் அவசர பொதுக்குழு கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் இயற்றப்பட்டன. அவர் பின்வருமாறு:
1. 01.07.2017 லிருந்து GST சட்டம் அமுலுக்கு வருகிறது. அனைத்து உறுப்பினர்களும் GST நம்பர் வாங்குவதற்கு நிர்பந்தப்படுத்தி இருக்கிறோம்.01.07.2017 லிருந்து யாரிடம் GST நம்பர் வைத்திருக்கிறார்களோ அவர்களிடம் மட்டும் வியாபாரம் செய்வது என முடிவு செய்திருக்கிறோம்.
2. தமிழ்நாட்டில் திரையரங்குகளில் நுழைவுக் கட்டணம் கடந்த 11 ஆண்டுகளாக (2006 முதல்) உயர்த்தி வழங்கப்படாமல் பழைய கட்டணமே இருந்து வருகிறது. இன்றைய விலைவாசி உயர்வு, பராமரிப்பு செலவுகள்,ஊழியர் சம்பள உயர்வு, மின் கட்டணம் மற்றும் இதர செலவினங்கள் பலமடங்கு கூடிவிட்ட காரணத்தால் திரையரங்குகள் நடத்துவது என்பது கேள்விக்குறியாகிவிட்டது. ஆகையால் திரையரங்குகளின் நுழைவுக் கட்டணத்தை உயர்த்தி தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.
3. தற்போது தொழிலாளார்கள் ஊதியம், மின்சார கட்டணம், பராமரிப்பு செலவுகள் மிகவும் உயர்ந்து விட்டதால், திரையரங்கு பராமரிப்பு கட்டணத்தை மற்ற மாநிலங்களை போல உயர்த்தி தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.
4. உள்ளூர்தொலைக்காட்சியில் உடனடியாக புதிய திரைப்படங்களை ஒளிபரப்புவதை தடை செய்து எங்களை காத்து திரையரங்குகளையும் காப்பாற்றுமாறு வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.
மேற்கண்ட தீர்மானங்கள் அடங்கிய மனு ஒன்றை விரைவில் அளிக்க இருப்பதாக காஞ்சிபுரம் - திருவள்ளுர் மாவட்ட திரையரங்கு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments