டிடிஎச் மூலம் திரைப்படங்கள் வெளியீடு: தயாரிப்பாளர் சங்கம் அதிரடி திட்டம்
- IndiaGlitz, [Monday,July 03 2017]
உலக நாயகன் கமல்ஹாசன் தனது படங்களில் பின்னால் வரக்கூடியதை முன்கூட்டியே கூறியவர் என்பது அனைவரும் அறிந்ததே. அவ்வாறான விஷயங்களில் ஒன்றுதான் திரைப்படங்களை டிடிஎச்-இல் திரையிடுவது. இதற்கான முயற்சியை அவர் தனது 'விஸ்வரூபம்' படத்தின் ரிலீசின்போது மேற்கொண்டார். ஆனால் அப்போது அவருக்கு ரெட்கார்ட் உள்ளிட்ட பல பயமுறுத்தல்கள் இருந்ததால் டிடிஎச் வெளியீட்டை தள்ளிவைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது
இந்த நிலையில் கமல்ஹாசனின் அந்த முயற்சி தற்போது நடைமுறைக்கு வரும் என தெரிகிறது. தயாரிப்பாளர்களிடம் எந்தவித ஆலோசனையிலும் ஈடுபடாமல் தன்னிச்சையாக இன்று முதல் திரையரங்க அதிபர்கள் வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர். இதனால் கடந்த வெள்ளியன்றும் அதற்கு முன்னர் வெளியான படங்களின் வசூலும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து தயாரிப்பாளர்கள் நஷ்டம் அடையாமல் தடுக்கும் நடவடிக்கையாக திரைப்படங்களை நேரடியாக டிடிஎச்-இல் வெளியிட தயாரிப்பாளர் சங்கம் திட்டமிட்டு வருகிறது. மேலும் டிடிஎச், இணையதளத்தில் வெளியிடுவது, கேபிள் டிவியில் நேரடியாக வெளியிடுவது போன்ற பல வசதிகள் தற்போதைய டெக்னாலஜி உலகில் இருப்பதால் திரையரங்குகளில் வெளியிடுவதால் கிடைக்கும் வசூலை விட பலமடங்கு வசூல் கிடைக்க வாய்ப்பு உள்ளது. எனவே டிடிஎச் உள்பட டெக்னாலஜி முறையில் திரைப்படங்களை வெளியிடுவது குறித்து தயாரிப்பாளர் சங்கம் விரைவில் ஒரு அதிரடி முடிவை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது