எனக்கு தனிப்பட்ட முறையில் 100% மிகப்பெரிய இழப்பு தான். விஷால்

  • IndiaGlitz, [Saturday,August 12 2017]

விஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் கடந்த சில மாதங்களாக உருவாகி வந்த 'துப்பறிவாளன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முற்றிலும் முடிந்துவிட்டது. இந்த படம் வெகுவிரைவில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நடிகர் சங்க, தயாரிப்பாளர் சங்கத்தின் இடைவிடாத பணிகளால் தான் நடிக்கும் படத்தின் பணிகள் பாதிக்கப்படுவதாகவும் இதனால் தனக்கு தனிப்பட்ட முறையில் 100% இழப்புகள் இருந்தாலும் திரையுலகின் நன்மைக்காக இந்த இழப்பை தான் சந்தோஷமாக ஏற்றுக்கொள்வதாகவும் விஷால் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விஷால் மேலும் கூறியதாவது, -'தயாரிப்பாளர் சங்க தலைவராக சக தயாரிப்பாளர்களின் நலனுக்காக போராடி வருவதால் நான் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்புக்கு சரியாக செல்ல முடியவில்லை. இந்த வருடம் பொங்கலுக்கு ஒரு படம் ஏப்ரல் ரிலீஸ் ஒரு படம் என்று திட்டமிடப்பட்ட நிலையில் தயாரிப்பாளர் சங்க வேலையில் பிஸியாக இருந்ததால் சரியான நேரத்தில் வெளியாகவில்லை.

ஆனால் இந்த இழப்பை 'சண்டக்கோழி' படத்தின் மூலம் கூட சரி செய்து கொள்ளலாம். இதனால் எனக்கு 100 % தனிப்பட்ட முறையில் மிகப்பெரிய இழப்பு தான். ஆனால் இங்கே ஒன்றை இழந்தால் தான் மற்றொன்று கிடைக்கும். கோடிகளை எப்போது வேண்டுமானாலும் சம்பாத்தித்து கொள்ளலாம். 7 வருடம் பின்னோக்கி இருந்த நமது திரையுலகை காப்பாற்ற வேண்டும் என்பது தான் எப்போதும் என்னுடைய சிந்தனையில் இருந்து வருகிறது. இப்போதைக்கு எனக்கு உண்ண உணவு , உடுக்க உடை , இதையெல்லாம் வாங்கும் அளவுக்கு பணம் உள்ளது அது போதும் என்று கூறினார்.