கமல்-விஷால் திடீர் சந்திப்பு: வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர பேச்சுவார்த்தையா?
- IndiaGlitz, [Sunday,March 18 2018]
தமிழ் சினிமா தற்போது பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. ஒருபக்கம் கியூப் பிரச்சனை, இன்னொரு பக்கம் ஜிஎஸ்டி பிரச்சனை, இது போதாதென்று ஆன்லைன் பைரஸி பிரச்சனை என அதிகபட்ச சோதனைகளை சந்தித்து வரும் தமிழ் சினிமா, தற்போது வேலைநிறுத்தத்தில் உள்ளது. புதிய படங்கள் ரிலீஸ் இல்லை உள்பட எந்தவித சினிமா பணிகளும் கடந்த சில நாட்களாக நடைபெறவில்லை.
இந்த நிலையில் சினிமாவில் சுமார் 40ஆண்டுகளுக்கும் மேல் இருந்து சினிமாவால் உயர்ந்த கமல், ரஜினி ஆகியோர் இந்த பிரச்சனையை தீர்க்க தலையிட வேண்டும் என்று திரையுலகினர் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு தயாரிப்பாளர் சங்கத்தலைவர் விஷாலை கமல் தனது ஆழ்வார்ப்பேட்டை அலுவலகத்திற்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
சுமார் ஐந்து நிமிடங்கள் மட்டுமே நடந்த இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஷால், 'திரைப்பட தயாரிப்பாளர் பிரச்சினை தொடர்பாக இன்று கமலை சந்தித்தேன். சினிமாத்துறையில் பிரச்னை என்றால் குரல் கொடுப்பவர் கமல்ஹாசன். விரைவில் ரஜினியையும் சந்திப்பேன்
புதிய டிஜிட்டல் சேவை நடைமுறைக்கு வரும் வரை தயாரிப்பாளர் சங்க போராட்டம் தொடரும். குறைந்த விலையில் புதிய டிஜிட்டல் சேவைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது; அடுத்த மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கின்றேன். புதிய டிஜிட்டல் சேவை நடைமுறைக்கு வரும் வரை தயாரிப்பாளர் சங்க போராட்டம் தொடரும், திரைப்படங்கள் வெளிவராது' என்று விஷால் கூறியுள்ளார்.