தன்ஷிகாவுக்கு டார்ச்சர் கொடுத்த டி.ராஜேந்தருக்கு விஷால் கண்டனம்: 

  • IndiaGlitz, [Friday,September 29 2017]

இன்று நடைபெற்ற 'விழித்திரு' படத்தின் செய்தியாளர் சந்திப்பில் படக்குழுவினர்களுடன் சிறப்பு விருந்தினராக டி.ராஜேந்தர் கலந்து கொண்டார். இந்த விழாவில் அனைவருக்கும் நன்றி கூறிய தன்ஷிகா, டி.ராஜேந்தர் பெயரை குறிப்பிட மறந்துவிட்டார். இந்த நிலையில் டி.ராஜேந்தர் பேசியபோது தனது பெயரை மறந்த தன்ஷிகாவை டார்ச்சர் செய்யும் வகையில் பேசினார். ஒரு கட்டத்தில் தன்ஷிகா மன்னிப்பு கேட்டதோடு, டி.ராஜேந்தர் காலிலும் விழுந்தார். ஆனாலும் தொடர்ந்து டி.ராஜேந்தர் சபை நாகரீகம் இல்லாமல் பேசியது அனைவரையும் நெளிய வைத்தது.

இந்த நிலையில் இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள நடிகர் சங்க தலைவர் விஷால் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இன்றைய 'விழித்திரு' பிரஸ்மீட்டில் டி.ராஜேந்தரின் பெயரை கூற மறந்ததற்காக மீண்டும் மீண்டும் தன்ஷிகாவை டார்ச்சர் செய்து பேசியது, அதிலும் குறிப்பாக மன்னிப்பு கேட்டபோதும் அந்த மன்னிப்பை ஏற்று கொள்ளாமல் தொடர்ந்து பேசியதற்கு கண்டனம் தெரிவித்து கொள்கிறேன்.

பல்திறமை வாய்ந்த ஒரு அனுபவமுள்ள டி.ராஜேந்தருக்கு ஒரு மேடையில் பேசும்போது ஒருசில பெயர்கள் விட்டுவிடுவது என்பது வழக்கமான ஒன்றுதான் என்பது தெரிந்திருக்கும். நான் கூட பல மேடைகளில் ஒருசிலரின் பெயர்களை விட்டுளேன்.

இந்த நிலையில் தன்ஷிகா மன்னிப்பு கேட்டது மட்டுமின்றி காலில் விழுந்தும், மகள் வயதுள்ள தன்ஷிகாவை மன்னித்து பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளாமல் டி.ராஜேந்தர் பேசியது கண்டனதுக்குரியது

சினிமா உலகில் ஒரு பெண் சாதிப்பது என்பது பெரிய விஷயம். அந்த வகையில் சாதித்து வரும் தன்ஷிகாவை எனக்கும் ரசிகர்களுக்கும் நன்கு தெரியும். இந்த சர்ச்சையை டி.ராஜேந்தர் தவிர்த்திருக்கலாம் என்பதோடு எனது கடுமையான கண்டனத்தை மீண்டும் பதிவு செய்கிறேன்

இவ்வாறு விஷால் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.