இரும்புத்திரை' மூலம் புதிய பாதையை கோலிவுட்டில் அறிமுகப்படுத்தும் விஷால்

  • IndiaGlitz, [Tuesday,January 30 2018]

ஒரு திரைப்படத்தை இயக்குபவர், நடிப்பவர்கள் மற்றும் படக்குழுவினர்கள் அந்த படத்தை குறைந்தபட்சம் நூறு முறையாவது பார்த்திருப்பார்கள். ஆனால் அவர்கள் கண்டுபிடிக்காத குறையை, படம் ரிலீஸ் ஆன பின்னர் ஒரே ஒருமுறை பார்க்கும் ஆடியன்ஸ்கள் கண்டுபிடித்துவிடுவார்கள். அதன்பின்னர் தான் இது முன்பே தெரிந்திருந்தால் மாற்றியிருக்கலாமே என்று படக்குழுவினர் எண்ணுவதுண்டு.

இந்த நிலையில் ஹாலிவுட், பாலிவுட் திரையுலகில் ‘ப்ரீ ரிலீஸ் ஃபோகஸ் டிஸ்கஷன்’ என்ற முறை கடந்த சில ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதாவது ரிலீசுக்கு முன்னர் படக்குழுவினர்களுக்கு நெருக்கமானவர்கள், பிரபலமானவர்கள் மற்றும் சாதாரண ஆடியன்ஸ் ஆகியோர் கொண்ட குழு ஒன்றை படம் பார்க்க வைத்து, அதன் மூலம் படத்தின் நிறைகுறைகளை அறிந்து சில மாற்றங்கள் செய்வதற்கு பெயர் தான் ‘ப்ரீ ரிலீஸ் ஃபோகஸ் டிஸ்கஷன்’

இந்த நடைமுறையை கோலிவுட்டில் முதல்முறையாக அறிமுகப்படுத்துகிறார் விஷால். அவர் நடித்து விரைவில் வெளியாகவிருக்கும் 'இரும்புத்திரை' படத்தை ‘ப்ரீ ரிலீஸ் ஃபோகஸ் டிஸ்கஷன்’ செய்ய முடிவு செய்துள்ளார். இந்த படத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து கோலிவுட்டில் இன்னும் பல படங்கள் இந்த ‘ப்ரீ ரிலீஸ் ஃபோகஸ் டிஸ்கஷன்’ முறையை பின்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.