'மாநாடு' படத்துடன் கனெக்சன் ஆன 'வீரமே வாகை சூடும்'

  • IndiaGlitz, [Friday,January 07 2022]

நடிகர் சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது என்பதும் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே. இந்த படத்த்தின் தமிழக திரையரங்குகள் ரிலீஸ் உரிமையை சுப்பையா சண்முகம் என்பவர் பெற்று இருந்தார் என்பதும் மிகப்பெரிய அளவில் இந்த படத்தை விளம்பரம் செய்து வெற்றிப் படமாக்கியதில் இவரது பங்கு முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ‘மாநாடு’ படத்தின் வெற்றியை அடுத்து விஷால் நடித்த ’வீரமே வாகை சூடும்’ என்ற படத்தின் தமிழக திரையரங்கு ரிலீஸ் உரிமையை சுப்பையா சண்முகம் பெற்று உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

’வலிமை’ உள்பட பெரிய பட்ஜெட் படங்கள் பொங்கல் ரேசில் இருந்து ஒதுங்கி உள்ள நிலையில் ’வீரமே வாகை சூடும்’ படத்தை பொங்கல் தினத்தில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் இதுகுறித்து விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் விரைவில் ரிலீஸ் தேதி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

விஷால், யோகிபாபு, மாரிமுத்து, துளசி, கவிதாபாரதி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் என்பதும் விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.