விஷாலின் 'துப்பறிவாளன்' ஒரு முன்னோட்டம்
- IndiaGlitz, [Wednesday,September 13 2017]
50 வருடங்களுக்கு முன்பு இருந்தே தமிழில் துப்பறியும் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கும். ஜெயசங்கரின் 'சிஐடி சங்கர், வல்லவனுக்கு வல்லவன் முதல் கமல்ஹாசனின் 'வேட்டையாடு விளையாடு' வரை பல துப்பறியும் படங்கள் தமிழில் ஹிட்டாகியுள்ளது. அந்த வகையில் தமிழில் வெளியாகும் மற்றொரு துப்பறியும் படம் 'துப்பறிவாளன்'
மிஷ்கின் படங்கள் என்றால் தனித்தன்மையுடன் இருக்கும் என்பது அவரது முதல் படமான 'சித்திரம் பேசுதடி' படத்தில் இருந்து தெரிந்ததே. அந்த வகையில் அவர் விஷாலுடன் களமிறங்கியுள்ள இந்த துப்பறியும் படமும் நிச்சயம் ரசிக்கும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசரும் உறுதி செய்துள்ளது
ஜிஎஸ்டி அமல்படுத்திய பின்னர் தமிழில் டைட்டில் வைக்கவே யோசிக்கும் திரையுலகினர் மத்தியில் டைட்டில் மட்டுமின்றி கேரக்டர்களின் பெயர்களும் கணியன் பூங்குன்றனார், பிரபாகரன், கதிர், என தூய தமிழில் வைத்துள்ளதற்கு முதலில் படக்குழுவினர்களை பாராட்டியே தீர வேண்டும்
'ரசிகர்களை மகிழ்விக்கும் அறிவுபூர்வமான துப்பறியும் காட்சிகள் , மெய்சிலிர்க்கவைக்கும் சண்டைக் காட்சிகள் , இதோடு இணைந்து ஒரு மெல்லிய காதல். இது தான் 'துப்பறிவாளன்' ஸ்பெஷல். இப்படத்தில் இடம்பெற்றுள்ள சண்டைக் காட்சிகள் மிகப்பெரிய அளவில் பேசப்படும்' என்று இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது இயக்குனர் மிஷ்கின் கூறியது இந்த படத்தின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது
விஷாலுடன் பிரசன்னா, வினய், அனு இமானுவேல், ஆண்ட்ரியா, சிம்ரன், கே.பாக்யராஜ், ஜான் விஜய், ஜெயப்பிரகாஷ், தலைவாசல் விஜய் என ஒரு நட்சத்திர கூட்டமே நடித்துள்ள இந்த படத்தை விஷால் பிலிம் பேக்டரி தயாரித்துள்ளது. அரோல் கரோலி இசையில் கார்த்திக் வெங்கட்ராமன் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்த படத்தின் விமர்சனத்தை நாளை பார்ப்போம்