அரசியலுக்கு வர்ற எல்லா தகுதியும் உன்கிட்ட இருக்குது: 'அயோக்யா' டிரைலர் விமர்சனம்

  • IndiaGlitz, [Friday,April 19 2019]

விஷால் நடிப்பில் உருவாகியுள்ள 'அயோக்யா' திரைப்படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகியுள்ளது. 'ஆண்டவன் படைச்சான் என்கிட்ட கொடுத்தான் அனுபவி ராஜான்னு அனுப்பி வைச்சான்' என்ற பழைய பட பாடலுடன் ஆரம்பிக்கும் இந்த டிரைலரில் ஒரு வில்லன் செய்ய வேண்டிய எல்லா வேலையையும் போலீஸ் கேரக்டரில் நடித்துள்ள விஷால் செய்கிறார். 

நீதி, நேர்மை, நியாயம் எல்லாமே அவனுக்கு பணம் தான், ஒண்ணாம் நம்பர் அயோக்கியன் என்ற அறிமுகத்துடன் விஷால் கேரக்டர் அறிமுகம் செய்யப்படுகிறது. பார்த்திபன் இன்னொரு நெகட்டிவ் கேரக்டரிலும் கே.எஸ்.ரவிகுமார் ஒரு உண்மையான போலீஸ் கேரக்டரிலும் நடித்திருப்பது தெரிகிறது. விஷாலின் ஆக்சன் காட்சிகள், ராஷி கண்ணாவின் கவர்ச்சி காட்சிகள் அடங்கிய இந்த படம் ஒரு பக்கா கமர்ஷியல் படம் என்ற தகுதியை பெறுகிறது. 

'தெய்வமே, அரசியலுக்கு வர்ற எல்லா தகுதியும் உங்களுக்கு இருக்குது' என யோகிபாபு கூறும் வசனம், விஷாலின் உள்மன ஆசையை வெளிப்படுத்துகிறது. ஒரு பெண்ணை ரேப் பண்ற தகுதி எங்களுக்கு இருக்குது, உங்களால எங்களுக்கு தண்டனை கொடுக்க முடியுமா? என்று நீதிபதியிடம் விஷால் சவால் செய்யும் காட்சியின் மூலம், படத்தில் ஏதோ வித்தியாசமாக இயக்குனர் வெங்கட் மோகன் சொல்ல வருகிறார் என்பதை காட்டுகிறது. மொத்தத்தில் விஷால் ரசிகர்களுக்கு ஒரு அதிரடி ஆக்சன் படம் தயாராகியுள்ளது என்பதே இந்த டிரைலரில் இருந்து தெரிய வருகிறது.