விஷாலின் மற்றுமொரு சமூக சேவை

  • IndiaGlitz, [Saturday,August 20 2016]

நடிகர் சங்க செயலாளரும் பிரபல நடிகருமான விஷால், நலிந்த நடிகர்களுக்கு மட்டுமின்றி பொதுமக்களுக்கும், மாணவ மாணவியர்களுக்கும் பல உதவிகள் செய்து வருவதை அவ்வப்போது வெளிவரும் செய்திகளை பார்த்து வருகிறோம்.
அதுமட்டுமின்றி அவர் எந்த ஊருக்கு படப்பிடிப்புக்காக சென்றாலும் அந்த ஊரில் என்ன தேவை என்பதை அறிந்து அதை செய்து கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார். விஷாலின் 'மருது' படப்பிடிப்பு இராஜபாளையத்தில் நடந்தபோது அங்குள்ள சில பகுதிகளில் பொதுகழிப்பறை இருப்பதை அறிந்து தன்னுடைய சொந்த செலவில் கழிப்பறைகள் கட்டிக்கொடுத்தார்.
அதேபோல் தற்போது விஷால் நடித்து வரும் 'கத்திச்சண்டை' படத்தின் படப்பிடிப்பு இராமநாதபுரம் மாவட்டத்தில் நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் அந்த பகுதியில் கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் தங்கள் படிப்பிற்கு தேவையான உபகரணங்கள் இல்லாமல் கஷ்டப்படுவதை அறிந்த நடிகர் விஷால், உடனே தனது தேவி அறக்கட்டளை மூலம் மீட்டாங்குளம், கமுதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் படிக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் தேவையான படிப்பு உபகரண பொருட்களை வழங்கினார். விஷாலின் இந்த பொதுசேவை தொடர வாழ்த்துக்கள்.