ஆதரவு இன்றி தவித்த 'ஆண்பாவம்' நடிகைக்கு விஷால் செய்த உதவி

  • IndiaGlitz, [Saturday,March 05 2016]

விக்ரம் நடித்த 'தூள்' படத்தில் நடித்த நடிகை பரவை முனியம்மா சமீபத்தில் உடல்நலமின்றி மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது நடிகர் சங்கம் அவருடைய மருத்துவ செலவிற்கான தொகையை அளித்ததுடன் அவருக்கு நிதியுதவியும் செய்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் பரவை முனியம்மா போலவே இன்னொரு வயதான நடிகையாகவும், பாடகியாகவும் இருந்த கொல்லாங்குடி கருப்பாயிக்கும் தற்போது நடிகர் சங்கம் உதவி செய்துள்ளது.

பாண்டியராஜன் இயக்கி நடித்த முதல்படமான 'ஆண்பாவம்' படத்தில் பாண்டியராஜனின் பாட்டியாகவும், விகே ராமசாமியின் அம்மாவாகவும் நடித்தவர் கொல்லாங்குடி கருப்பாயி. இந்த படத்தின் வெற்றிக்கு பின்னர் பல படங்களில் பாடி நடித்த இவர் தற்போது வறுமையில் வாடி வருவதாகவும் அரசு கொடுக்கும் ரூ.1500 போதாமல் கஷ்டப்படுவதாகவும், நடிகர் சங்கத்திற்கு தகவல் வந்தது.

உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை எடுத்த நடிகர் சங்க செயலாளர் விஷால் தனது நண்பர்கள் மூலம் கொல்லாங்குடி கருப்பாயிக்கு தேவையான உதவிகளை செய்துள்ளார். மேலும் கொல்லாங்குடி கருப்பாயியை உடனடியாக நடிகர் சங்க உறுப்பினர் ஆக்கவும் உத்தரவிட்டுள்ளாராம். நலிந்த நடிகர், நடிகைகள் குறித்து கேள்விப்பட்ட உடனேயே நடவடிக்கை எடுத்துள்ள விஷாலின் முயற்சிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.