விஷாலின் வேலைநிறுத்த திட்டத்திற்கு மேலும் ஒரு தடை!
- IndiaGlitz, [Saturday,May 20 2017]
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 1 முதல் ஒட்டுமொத்த திரையுலகமும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் என்று அறிவித்திருந்தார். விஷாலின் இந்த அறிவிப்புக்கு திரைப்பட உரிமையாளர்கள் சங்கம் மற்றும் விநியோகிஸ்தர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்ததோடு, வழக்கம் போல் ஜூன் 1 முதல் திரையரங்குகள் இயங்கும் என்று அறிவித்தனர். மேலும் இம்மாதம் 26ஆம் தேதி திட்டமிட்டபடி 'தொண்டன்' மற்றும் 'பிருந்தாவனம்' திரைப்படங்கள் வெளியாகும் என்றும் விநியோகிஸ்தர்கள் சங்கமும் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற ஜி.எஸ்.டி, மாநாட்டில் பொழுதுபோக்கு மற்றும் வணிக நிறுவனக்களுக்கான வரியை 28 சதவீதமாக உயர்த்தி மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி அறிவித்தார். இதன் காரணமாக மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் மற்றும் வணிக மால்களில் இயங்கும் திரையரங்குகளுக்கான சினிமா டிக்கெட் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே திருட்டு டிவிடி, இணையதளங்களில் டவுன்லோடு பிரச்சனையால் திரையரங்குகளுக்கு வரும் பார்வையாளர்களது எண்ணிக்கை குறைந்து கொண்டே வரும் நிலையில் ஜிஎஸ்டி காரணமாக திரையரங்க கட்டணங்களின் விலை உயர்வு காரணமாக தியேட்டருக்கு வரும் கூட்டம் மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே வருகின்ற ஜூலை 1ம் தேதி முதல் ஜி.எஸ்டி அமலுக்கு வருவதால் அதற்கு முன்னரே தற்போது ரிலீசுக்கு தயாராகவுள்ள படங்கள் அனைத்தையும் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டு வருகிறது. கோலிவுட்டில் இதுகுறித்து ஆலோசனை செய்ய அவசர கூட்டம் ஒன்று நடைபெறுவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
எனவே விஷாலின் வேலைநிறுத்த திட்டம் திட்டமிட்டபடி நடக்குமா? என்பது குறித்த ஐயம் தற்போது எழுந்துள்ளது.