திருட்டு டிவிடி பிரச்சனை : விஷாலின் மேலும் ஒரு அதிரடி நடவடிக்கை

  • IndiaGlitz, [Saturday,July 02 2016]

கடந்த சில வருடங்களாக திருட்டு டிவிடி பிரச்சனை திரையுலகினர்களுக்கு தீராத தலைவலியாக இருந்து வருகிறது. தமிழக அரசின் நடவடிக்கைகளோடு திரையுலகினரும் இதற்கென ஒரு கண்காணிப்பு குழுக்களை அமைத்து திருட்டுடிவிடி விற்பனை, கேபிள் டிவியில் அனுமதியின்றி ஒளிபரப்பாகும் புதிய படங்கள், பேருந்துகளில் புதிய படங்கள் ஒளிபரப்புவது ஆகிய செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டிபிடிப்பதில் தீவிரமாக உள்ளது.
இந்நிலையில் இன்று கும்பகோணத்தில் இயங்கி வரும் தனியார் லோக்கல் சேனலில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்து நடித்த 'மனிதன்' திரைப்படம் ஒளிபரப்பியதை கண்டுபிடித்த இந்த கண்காணிப்பு குழு உடனடியாக நடிகர் சங்க பொது செயலாளர் விஷாலுக்கு தகவல் கொடுத்தனர்.
விஷாலின் புகாரின் பேரில் திருட்டு வீடியோ தடுப்பு பிரிவு கண்காணிப்பாளர்.திருமதி ஜெயலட்சுமி IPS அவர்களது உத்திரவின்படி காவல் ஆய்வாளர்கள். திரு செந்தில், திருமதி.சித்ரா, நடிகர் சங்க திருட்டு வீடியோ தடுப்பு பிரிவு ஒருங்கிணைப்பாளர். சதீஷ்குமார் ஆகியோர் அந்த தனியார் சேனலின் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் அனைவரையும் கைது செய்து கும்பகோணம் சிறையில் அடைத்தனர். மேற்கண்ட செய்தியை நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கபட்டுள்ளது.