கன்னட திரைப்பட விழாவில் தமிழில் கெத்து காட்டி பேசிய விஷால்
- IndiaGlitz, [Thursday,June 29 2017]
கடந்த பல வருடங்களாக தமிழக மற்றும் கர்நாடக அரசுகளுக்கு இடையே காவிரி நதிநீர் பிரச்சனை இருந்து வரும் நிலையில் இந்த பிரச்சனை இருமாநில பொதுமக்கள் மற்றும் அரசியல்வாதிகளை மட்டுமின்றி திரையுலகினர்களையும் அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் தமிழக, கர்நாடக நட்சத்திரங்கள் இடையே ஒரு பெரும் இடைவெளி ஏற்பட்டுள்ள நிலையில் சமீபத்தில் கன்னட திரைப்பட விழா ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் விஷால் ஒருசில தைரியமான கருத்துக்களை தமிழிலேயே பேசி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார்
'உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு' என்று ஆரம்பித்த விஷால் தனது தாய்மொழியான தமிழில் பேசுவது தனக்கு பெருமை என்றும் இதை யாராலும் தடுக்க முடியாது என்றும் கூறினார். மேலும் காவிரியில் தண்ணீர் கேட்பது தமிழக மக்களின் உரிமை என்றும், நான் எல்லோரும் இந்தியர்கள் என்பதை மனதில் வைத்து கர்நாடகத்தில் வாழும் தமிழர்களையும், தமிழகத்தில் வாழும் கன்னடர்களை பாதுகாப்புடன் காப்பது நமது கடமை என்றும் பேசினார்.
மேலும் கன்னட தயாரிப்பாளர்களுக்கு எந்தவித பிரச்சனை ஏற்பட்டாலும் அதை தீர்த்து வைக்க தமிழ் தயாரிப்பாளர் சங்கம் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். வாட்டாள் நாகராஜ் போன்றவர்கள் இருக்கும் கர்நாடகத்தில் காவிரி பிரச்சனை குறித்து பேச அரசியல்வாதிகளே தயங்கும் நிலையில், சிங்கத்தின் குகைக்கே சென்று தமிழில் சீறிய விஷாலுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.