விஷாலின் 'இரும்புத்திரை': முதல் பாதியின் விமர்சனம்
Send us your feedback to audioarticles@vaarta.com
மோசடியாக பணம் சம்பாதிப்பவர்கள், வங்கியை ஏமாற்றி லோன் வாங்குபவர்களிடம் இருந்து பணத்தை இண்டர்நெட் மூலம் கொள்ளையடிக்கின்றது ஒரு கும்பல். இந்த கொள்ளை குறித்து போலீசுக்கு போக முடியாமல் தவிப்பவரகளின் நிலை என்ன என்பதுதான் இந்த படத்தின் கதை.
விஷால் ஒரு மிலிட்டரிமேன். அடிக்கடி கோபம் கொள்வதால் அவருடைய மேலதிகாரி அவரை ஒரு மனோதத்துவ மருத்துவரிடம் போய் சான்றிதழ் வாங்க சொல்கிறார். டாக்டர் ரதிதேவியான சமந்தாவிடம் செல்லும் விஷால் அவரது சொல்படி சிகிச்சை பெறுகிறார். இந்த நிலையில் தங்கையின் திருமணத்திற்காக பொய் சொல்லி வங்கியில் ஆறு லட்ச ரூபாய் கடன் வாங்குகிறார் விஷால். அந்த பணம் திடீரென வங்கி கணக்கில் இருந்து காணாமல் போகிறது. இதனால் தங்கையின் திருமணம் கேள்விக்குறியாகிறது. வங்கி பணத்தை மீட்டாரா? இண்டர்நெட் கொள்ளையர்களை பிடித்தாரா? தங்கையின் திருமணம் நடந்ததா? என்பதுதான் மீதிக்கதை
விஷால் ஒரு மிலிட்டரிமேன் கேரக்டருக்கு உடலளவில் ஃபிட் என்பது ப்ளஸ். சமந்தாவிடம் சிகிச்சை எடுக்கும்போது அவரிடம் ரொமான்ஸ் செய்வது, ரோபோ சங்கருடன் சேர்ந்து காமெடி செய்வது, அநியாயங்களை கண்டு பொங்குவது என சராசரி நடிப்பை தந்துள்ளார் விஷால். மனோதத்துவ டாக்டராக வரும் சமந்தாவின் நடிப்பில் மெச்சூரிட்டி தெரிகிறது. ரோபோசங்கர் ஆங்காங்கே இரட்டை அர்த்த வசனங்களுடன் காமெடி செய்கிறார். விஷாலின் அப்பாவாக நடித்துள்ள டெல்லி கணேஷ், ஓரிரு காட்சிகளில் மனதை தொடுகிறார்.
மைனஸ் என்று பார்த்தால் விஷால்-சமந்தா சிகிச்சை காட்சிகள் அப்படியே 'மாயவன்' படக்காட்சிகளின் டப்பிங் போல் தெரிகிறது. மாயவன் படத்தை விஷால், மித்ரன் இருவருமே பார்க்கவில்லை என்பது தெரிகிறது. மேலும் ஒரு ராணுவ வீரர், இந்தியா சரியில்லை, இந்தியாவை விட்டுவிட்டு வெளிநாட்டில் செட்டில் ஆகவேண்டும் என்று கூறுவதை ஏற்க முடியவில்லை. அதேபோல் ஒரு சின்சியரான ராணுவ வீரர் எந்த சூழ்நிலையிலும் பிராடு செய்து லோன் வாங்குவாரா? என்பதிலும் லாஜிக் இடிக்கின்றது.
யுவன்ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை சூப்பர். முதல் பாதியின் இரண்டு பாடல்களும் ஓகே. ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு, மற்றும் ரூபன் எடிட்டிங் இரண்டுமே கச்சிதம்.
இயக்குனர் மித்ரன் சொல்ல வந்த விஷயத்தை ஓரிரு இடங்களில் மட்டும் சொல்லிவிட்டு படத்தின் மெயின் கதைக்கு தேவையில்லாத அதிக காட்சிகளை முதல் பாதியில் வைத்துள்ளார். மொத்ததில் இரண்டாம் பாதி விறுவிறுப்பாக இருந்தால் ஒரு நல்ல ஆக்சன் படம் பார்த்த திருப்தி ஏற்படும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout