விஷால் சஸ்பெண்டை திரும்ப பெற முடியாது. தயாரிப்பாளர் சங்கம் அதிரடி
- IndiaGlitz, [Friday,January 06 2017]
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு வரும் பிப்ரவரி 5ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் விஷால் அணியின் தரப்பில் பிரபல நடிகை குஷ்பு தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் விஷால் வார இதழ் ஒன்றில் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை கூறியதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இதுகுறித்து விஷால் தொடர்ந்த வழக்கில் 'விஷால் தன்னுடைய கருத்து குறித்து வருத்தம் தெரிவித்தால் அவரது சஸ்பெண்ட் மறுபரிசீலனை செய்யப்படும் என்று தயாரிப்பாளர் சங்கத்தின் வழக்கறிஞர் சமீபத்தில் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதனையடுத்து விஷால் வருத்தம் தெரிவித்து நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்நிலையில் விஷாலின் சஸ்பெண்ட் ரத்து செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தற்போது நடிகர் விஷால் வருத்தம் தெரிவித்ததை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்கம் குறித்து தொடர்ந்து அவதூறு பேசி வருவதாகவும், இதனால் சஸ்பெண்டை திரும்பப் பெற முடியாது என்றும் தயாரிப்பாளர் சங்கத்தின் தரப்பில் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.