பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற ஏழை மாணவர்களின் மேல் படிப்புக்கு உதவி: விஷால் அறிவிப்பு..!
- IndiaGlitz, [Monday,May 08 2023]
பிளஸ் டூ பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியான நிலையில் அதில் தேர்வு எழுதிய 94 சதவீதத்திற்கும் அதிகமான மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் பிளஸ் டூ தேர்வில் தேர்ச்சி பெற்ற ஏழை மாணவர்களின் மேல் படிப்புக்கு உதவி செய்வதாகவும் அவர்கள் குறித்த விபரங்களை அனுப்பினால் பரிசீலனை செய்து அவர்களுடைய மேல் படிப்புக்கு தகுந்த உதவி செய்யப்படும் என்றும் நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். இது குறித்து நடிகர் விஷால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பிளஸ்+2 பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் புரட்சி தளபதி விஷால் அவர்களின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் தேர்ச்சி பெறாத மாணவ, மாணவிகள் மனம் தளராமல் இருக்க வேண்டும். தோல்விகள் வாழ்க்கையில் இயல்பு தான். ஆகையால் எந்த விதத்திலும் முயற்சிகளை கைவிடாமல் தொடர்ந்து படித்து, மறு தேர்வில் வெற்றி பெற வாழ்த்துகிறோம்.
மக்கள் நல இயக்கத்தின் பொறுப்பாளர்களுக்கும், அன்பான சொந்தங்களுக்கும் வணக்கம். வருடம் தோறும் பிளஸ்+2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்று, மேற்கொண்டு படிக்க இயலாத வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட மாணவ, மாணவிகளை நமது அண்ணன் புரட்சி தளபதி விஷால் அவர்கள் தனது ‘தேவி அறக்கட்டளை’ மூலம் படிக்க வைத்து வருகிறார். அதேபோன்று இந்த ஆண்டுக்கான விண்ணப்பங்கள் பதிவு நடைபெற்று வருகிறது.
நமது மக்கள் நல இயக்கத்தின் பொறுப்பாளர்கள் உங்கள் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் பிளஸ்+2 பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண் வாங்கி, தேர்ச்சி பெற்று மேற்கொண்டு படிக்க முடியாத மாணவ, மாணவிகள் குறித்த முழு விபரங்களையும் நமது ‘தேவி அறக்கட்டளை’ மின்னஞ்சல் devifoundationchennai@gmail.com முகவரிக்கு அனுப்புங்கள். அவர்களின் மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு, அவர்களின் மேற்படிப்பிற்கு உதவிகள் செய்யப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் என விஷால் மக்கள் நல இயக்கத்தின் செயலாளரும் தேவி அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளருமான V ஹரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பிளஸ்+2 பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் புரட்சி தளபதி விஷால் அவர்களின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம். @VishalKOfficial @HariKr_official @VISHAL_SFC @VffVishal pic.twitter.com/rke7GN44aV
— DEVI FOUNDATION (@DEVIFOUNDATIONS) May 8, 2023