கமல் மீது வழக்கா? காட்டமான விஷால்
- IndiaGlitz, [Wednesday,May 23 2018]
தூத்துகுடியில் நேற்று நடைபெற்ற காவல்துறையினர்களின் துப்பாக்கி சூடு காரணமாக 11 அப்பாவி பொதுமக்கள் மரணம் அடைந்தனர். அவர்களுடைய குடும்பத்தினர்களுக்கு ஆறுதல் தெரிவிக்கவும், துப்பாக்கி சூடு சம்பவத்தின்போது படுகாயம் அடைந்த நபர்களை நேரில் சென்று பார்க்கவும் இன்று காலை நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் தூத்துகுடிக்கு சென்றார்.
ஆனால் தூத்துகுடியில் இன்று காலை முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த தடை உத்தரவால் 4 பேர்களுக்கு மேல் கூட்டமாக செல்லக்கூடாது என்பது சட்டம். ஆனால் இந்த சட்டத்தை மீறி கமல், அரசு மருத்துவமனைக்கு கூட்டத்துடன் சென்று காயமுற்றவர்களை பார்த்ததாக அவர் மீது தூத்துகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த தகவல் அறிந்தவுடன் நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளார் சங்க தலைவருமான விஷால் தனது சமூக வலைத்தளத்தில் காட்டமான ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். தூத்துகுடியில் காயம் அடைந்த அப்பாவி பொதுமக்களை கமல் பார்க்க சென்றது தவறா? என்ன கொடுமை இது. ஒரு நடிகராக அரசியல்வாதியாக ஒரு சமூக அக்கறையுள்ள மனிதனாக இதை கூட செய்ய அனுமதி இல்லை எனில், கடவுள் தான் எங்களை காப்பாற்ற வேண்டும்' என்று விஷால் கூறியுள்ளார். விஷாலின் இந்த கருத்துக்கு வழக்கம்போல் சமூகவலைத்தள பயனாளிகள் ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துக்களை கமெண்ட்டாக தெரிவித்து வருகின்றனர்.