11 ஆண்டுகளாக முடங்கியிருந்த விஷால் படம் ரிலீஸ் ஆகிறதா? லேட்டஸ்ட் அப்டேட்..!

  • IndiaGlitz, [Tuesday,July 09 2024]

விஷால் நடித்த திரைப்படம் கடந்த 11 ஆண்டுகளாக ரிலீசாகாமல் முடங்கி இருந்த நிலையில் தற்போது இந்த படத்தை ரிலீஸ் செய்வதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

விஷால் நடிப்பில், சுந்தர் சி இயக்கத்தில் உருவான ’மத கஜ ராஜா’ என்ற திரைப்படம் கடந்த 2012 ஆம் ஆண்டு தொடங்கி 2013 ஆம் ஆண்டு ரிலீசுக்கு தயாரானது. விஷால், அஞ்சலி, வரலட்சுமி, சந்தானம், நிதின் சத்யா, சடகோபன் ரமேஷ் உள்பட பலரது நடிப்பில் உருவான இந்த படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருந்தார்.

இந்த படம் ரிலீசுக்கு 2013 ஆம் ஆண்டு தயாரான நிலையில் ஒரு சில பொருளாதாரப் பிரச்சினை காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. அதன் பிறகு இந்த படம் ரிலீஸ் ஆகாது என்று கிட்டத்தட்ட முடிவு செய்யப்பட்டது.

சமீபத்தில் கூட ’அரண்மனை 4’ திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பின்போது இந்த படம் குறித்த கேள்விக்கு ’இந்த படத்தின் தயாரிப்பாளர் தி நகரில் தான் இருக்கிறார், அவரது முகவரி தருகிறேன், நீங்களே போய் கேளுங்கள்’ என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தை ரிலீஸ் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.