நடு ரோட்டில் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த 'விசாரணை' பட எழுத்தாளர்!
- IndiaGlitz, [Saturday,April 18 2020]
நடுரோட்டில் பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்த பெண்ணுக்கு வெற்றிமாறன் இயக்கிய ‘விசாரணை’ படத்தின் கதையை எழுதிய ஆட்டோ சந்திரன் என்பவர் நடுரோட்டில் பிரசவம் பார்த்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை சிங்காநல்லூர் பகுதியில் சாலையோரத்தில் வசித்து வரும் ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த கூலி வேலை செய்யும் பெண் ஒருவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து அவரது கணவர் அந்த பெண்ணை தூக்கி கொண்டு மருத்துவமனை நோக்கி ஓடினார். ஆனால் வழியிலேயே அந்த பெண்ணுக்கு பிரசவ வலி அதிகமானதால் அங்கு ஓரமாக ஒரு இடத்தில் உட்கார வைத்துவிட்டு ஆம்புலன்சுக்கு அழைப்பு விடுத்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த ’விசாரணை’ படத்தின் கருவான ‘லாக்கப்’ என்ற புத்தகத்தை எழுதியவரும் ஆட்டோ ஓட்டுபவருமான சந்திரன், உடனடியாக அந்தப் பகுதிக்கு விரைந்து வந்தார். அவர் தனது ஆட்டோவில் அந்த பெண்ணை ஏற்றி மருத்துவமனைக்கு செல்ல முற்பட்டபோது பெண்ணின் வயிற்றில் இருந்த குழந்தையின் தலை எட்டிப்பார்த்தது. இதனால் வேறு வழியின்றி சாலை ஓரத்திலேயே அந்த பெண்ணுக்கு அவர் பிரசவம் பார்த்தார். அந்த பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
இதனை அடுத்து அந்த பெண் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தொப்புள் கொடியை அறுத்து சிகிச்சை பெற்றுக் கொண்டார். இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சரியான நேரத்தில் பெண்ணுக்கு பிரசவம் பார்த்து பெண்ணின் உயிரையும் குழந்தையின் உயிரையும் காப்பாற்றிய ’விசாரணை’ எழுத்தாளர் ஆட்டோ சந்திரனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.