பதவி விலகிய கோலிக்கு பிசிசிஐ கொடுத்த ஆஃபர்... என்ன செய்தார் தெரியுமா?

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன்சி பதவியில் இருந்து விராட் கோலி பதவி விலகியுள்ளார். இதைத் தொடர்ந்து இலங்கைக்கு எதிரான தொடர் போட்டியில் வேறு கேப்டன் நியமிக்கப்படுவார் எனக் கருதப்பட்ட நிலையில் மீண்டும் விராட் கோலியே இலங்கை தொடருக்கு கேப்டனாக இருக்க வேண்டும் என்று பிசிசிஐ கேட்டுக் கொண்டுள்ளது. ஆனால் இதற்கு விராட் கோலி மறுப்பு தெரிவித்து இருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

டி20, ஒருநாள், டெஸ்ட் கிரிக்கெட் என 3 வடிவ இந்தியக் கிரிக்கெட் அணிக்கும் கேப்டனாக இருந்துவந்த கோலி ஒருநாள் மற்றும் டி20 கேப்டன்ஷியில் தொடர்ந்து சொதப்பி வருகிறார் எனக் கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டது. ஆனால் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியைப் பொறுத்தவரை அவர் சிறப்பான தலைவராக செயல்பட்டு வந்தார். மேலும் 68 போட்டிகளுக்கு கேப்டனாக பதவிவகித்த கோலி பல்வேறு சாதனைகளையும் புரிந்துள்ளார்.

இந்நிலையில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டிக்குப் பிறகு அவர் திடீரென பதவி விலகியுள்ளார். மேலும் ஒரு சிறந்த பேட்ஸ்மேனாக இருப்பதற்கு விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஒரு போட்டியாளராகவே கலந்து கொள்ள இருக்கிறார்.

இந்தப் போட்டி முடிந்தவுடன் இலங்கைக்கு எதிரான தனது 100 ஆவது டெஸ்ட் தொடர் போட்டியில் கோலி விளையாடவுள்ளார். இந்தப் போட்டிகள் பெங்களூருவில் நடைபெற இருக்கிறது. ஐபிஎல் போட்டிகளுக்காக கோலி ஏற்கனவே பெங்களூரு மைதானத்தில் பலமுறை கேப்டன்சி பதவி வகித்துள்ளார். இதனால் அங்குள்ள அனைத்து மைதானங்களும் அவருக்கு அத்துப்படி. எனவே இலங்கைக்கு எதிரான தனது 100 ஆவது போட்டியை விராட் கோலி ஃபேரவல் போட்டியாக நினைத்து கேப்டனாகப் பொறுப்பு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பிசிசிஐ வலியுறுத்தி இருந்தது.

ஆனால் ஒரு தொடரால் பெரிய மாற்றங்கள் எதுவும் ஏற்பட போவதில்லை எனக் கூறி கோலி அதைத் தற்போது மறுத்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தத் தகவலை அடுத்து கோலியின் ரசிகர்கள் கடும் ஏமாற்றம் அடைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.