பதவி விலகல்… முதல்முறையாக மவுனம் கலைத்த விராட் கோலி!

இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி டி20 கிரிக்கெட் போட்டியின் கேப்டன் பதவியில் இருந்து பதவி விலகியதைத் தொடர்ந்து ஒருநாள் போட்டியின் கேப்டன் பதவியில் இருந்து விலக்கப்பட்டார். தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் கேப்டன் பதவியில் இருந்தும் அவரே பதவி விலகியிருக்கிறார்.

இதையடுத்து விராட் கோலி முதல் முறையாகப் பதவி விலகலுக்கான காரணம் என்ன? இனி இந்திய அணியில் அவருடைய நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பது போன்ற பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்துகொண்டுள்ளார். அதில் எதற்கும் ஒரு கால அவகாசம் வேண்டும். அதை நான் எப்போதுமே உணர்ந்திருக்கிறேன். நாம் என்ன சாதித்து விட்டோம் என மற்றவர்கள் விமர்சிக்கலாம். ஆனால் நாம் தொடர்ந்து முன்னேறும்போது நாம் என்ன செய்திருக்கிறோம் என்பது தெரியவரும்.

எல்லா விஷயங்களுக்கும் ஒரு காலம் உள்ளது. அப்படித்தான் கேப்டன் பதவி என்பதும். கேப்டனாக நான் என்ன செய்தேன் என்று எனக்கு தெரியும். தற்போது வாழ்க்கையின் அடுத்த பக்கத்துக்கு செல்கிறேன். இனி அணியில் பேட்ஸ்மேனாகத் தொடர்வேன் அணியின் வெற்றிக்காக பாடுபடுவேன். அணியின் வெற்றிக்கு உதவிய திருப்தி எனக்கு கிடைக்கும். அதுதான் எனக்கு முக்கியம்.

தலைவனாக நீடிக்க கேப்டனாக தான் இருக்க வேண்டும் என்பது அல்ல. கேப்டனாக இருப்பதற்கு முன்பே நான் ஒரு கேப்டன் போல தான் யோசிப்பேன். செயல்படுவேன். எனக்கு நான் தான் தலைவன். எனக்கு இருக்கும் பொறுப்பை உணர்ந்து செயல்படுவேன். தோனி கேப்டனாக இருக்கும்போது அணியில் எப்படி இருந்தேனோ அதேபோல் தான் இப்போதும் இருப்பேன்.

தோனி கேப்டனாக இருக்கும்போது அவர் தலைவன் என்ற உணர்வோடு இருக்க மாட்டார். போட்டி தொடர்பான யுக்திகள் மற்றும் தகவல்களைத் தெரிவிக்கும் நபராகத்தான் தோனி செயல்படுவார். அணியை நான் வழிநடத்துவதற்கான நேரம் வந்துவிட்டது என்பதை அவர் உணர்ந்துதான் எனக்கு இந்தப் பதவியை தோனி வழங்கினார்.

தற்போது நானும் அணியின் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு எது தேவை என்பதைக் கருத்தில் கொண்டே சரியான நேரத்தில் கேப்டன் பதவியை விட்டு விலகினேன். அணிக்கு ஒரு புதிய பாதை தேவைப்பட்டது. புதிய சிந்தனைகளுடைய ஆக்கப்பூர்வமான விஷயங்களை மேற்கொள்ள புதிய நபர் தேவைப்பட்டார். இதனால்தான் நான் விலகினேன். எப்போதும் போல் இந்திய அணிக்காக விளையாடி ரன் குவிப்பேன். அதுதான் சிறந்தது எனத் தெரிவித்தள்ளார்.

இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னணி வீரராக இருந்துவரும் விராட் கோலி கடந்த 2 வருடங்களாக பேட்டிங்கில் சரியான பார்ஃம் இல்லாமல் தவித்து வருகிறார். தற்போது கேப்டன் பதவியை விட்டு விலகியிருக்கும் நிலையில் மீண்டும் பழைய நிலைமைக்குத் திரும்புவது குறித்து தீவிரமாக யோசித்துவருகிறார். இந்நிலையில் தலைவனாக இருக்க விரும்புவதைவிட எனக்கு நானே தலைவனாக இருந்து அணியில் சிறந்த வீரராகச் செயல்பட விரும்புகிறேன் எனத் தெரிவித்து இருப்பது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.