கோடிகளுக்கு விலைபோகாத விராத்கோஹ்லி! இந்தியன்டா...
- IndiaGlitz, [Tuesday,June 06 2017]
கடந்த ஜனவரி மாதம் சென்னை மெரீனாவில் மாணவர்கள் நடத்திய ஜல்லிக்கட்டு புரட்சி போராட்டத்தில் 'அயல்நாட்டு குளிர்பான நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த விழிப்புணர்வு காரணமாக கடந்த ஏப்ரல் முதல் தமிழகத்தில் பெப்சி, கோக் உள்பட குளிர்பானங்களை விற்பதில்லை என்று வியாபாரம் சங்கம் முடிவு செய்தது.
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமும், கேப்டனுமான விராத் கோஹ்லி பெப்சி நிறுவனத்தின் விளம்பரத்தில் இருந்து விலகியுள்ளார். பெப்சி நிறுவனத்துடன் செய்து கொண்ட ஆறு வருட ஒப்பந்தம் சமீபத்தில் முடிவடைந்ததை அடுத்து மீண்டும் ஒப்பந்தத்தை புதுப்பிக்க அவர் மறுத்துவிட்டார்.
ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையை விட தற்போது பல மடங்கு விராத் கோஹ்லியின் புகழ் அதிகமாகியிருப்பதால் அவர் எத்தனை கோடி கேட்டாலும், பெப்சி நிறுவனம் கொடுக்க தயாராக இருந்தது. ஆனாலும் பணத்தை ஒரு முக்கிய பொருட்டாக மதிக்காமல் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் குளிர்பானத்தை இனிமேல் விளம்பரப்படுத்த மாட்டேன் என்று எடுத்த அவருடைய முடிவை அனைத்து தரப்பினர்களும் பாராட்டி வருகின்றனர்.
'உடல் நலத்திற்கு பாதிப்பு ஏற்படும் ஒரு பொருளை நான் எவ்வாறு பயன்படுத்த மாட்டேனோ, அதேபோல் மற்றவர்கள் அதே பொருளை பயன்படுத்துவதற்கு என்னால் எப்படி விளம்பரம் செய்ய முடியும்? என்று விராத் கோஹ்லி கூறியுள்ளார். இந்த கூற்றால் விராத் கோஹ்லி ஒரு நல்ல விளையாட்டு வீரர் மட்டுமின்றி ஒரு நல்ல இந்திய குடிமகனாகவும் விளங்குகிறார் என்பதை நிரூபித்துள்ளார்.