விமர்சனத்திற்கு இடையே டி20 கிரிக்கெட்டில் விராட் கோலி செய்த அசத்தல் சாதனை!
- IndiaGlitz, [Monday,September 27 2021] Sports News
கேப்டன்சியில் சொதப்புகிறார், இந்திய அணிக்கு ஐசிசி கோப்பையைப் பெற்றுத்தரவில்லை என்று விராட் கோலி மீது விமர்சனம் வைக்கப்பட்ட அதேவேளையில் ஐபிஎல் போட்டிகளிலும் பெங்களூரு அணிக்கு ஒருமுறைகூட வெற்றிக்கோப்பையைப் பெற்றுத்தரவில்லை என்று கடும் விமர்சனம் வைக்கப்பட்டது. இதனால் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி முடிந்த பிறகு டி20 இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகப்போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டார்.
இதையடுத்து பெங்களூரு அணியின் கேப்டன் பதவியில் இருந்தும் விலகிக்கொள்வதாக விராட் கோலி தெரிவித்து உள்ளார். இப்படி கோலி மீது விமர்சனமும் அதைத்தொடர்ந்து பதவி விலகல்களும் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே டி20 கிரிக்கெட் போட்டியில் சர்வதேச அளவில் முதல் 10 ஆயிரம் ரன்களை குவித்த சாதனை வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
ஐபிஎல் 14 ஆவது சீசன் போட்டியின் 39 ஆவது லீக் ஆட்டத்தில் நேற்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்ளூரு அணிக்கும் இடையே நடைபெற்றது. இதில் பெங்களூரு அணியினர் முதல் முறையாக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 6 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்களை குவித்து இருந்தனர். 166 ரன்கள் என்ற இலக்குடன் ஆடத் துவங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியினர் படு சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி 18.11 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 111 ரன்களை மட்டுமே எடுத்திருந்ததால் 54 ரன்கள் வித்தியாசத்தில் விராட் கோலியின் பெங்களூரு அணி வெற்றிப்பெற்றது.
இந்தப் போட்டியில் கோலி 41 பந்துகளுக்கு 51 ரன்களை எடுத்திருந்தார். இதில் 13 ஆவது ரன்னை அடிக்கும்போது டி20 கிரிக்கெட் போட்டியில் 10 ஆயிரம் ரன்களைத் தாண்டிய முதல் சர்வதேச இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். சர்வதேச அளவில் 5 வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
விராட் கோலி இதுவரை 314 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். அதில் 5 சதம், 74 அரை சதம், 10,038 ரன்கள் எடுத்துள்ளார். இவரைத் தவிர டி20 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கிறிஸ் கெயில் 14,275 ரன்களையும் பொல்லார்ட் 11,195 ரன்களையும் பாகிஸ்தான் அணியின் சோயிப் மாலிக் 10,808 ரன்களையும் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் 10,019 ரன்களையும் குவித்துள்ளனர்.
நேற்றையை போட்டி பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு சாதகமான நிலையில் அவர்கள் 12 புள்ளிகளுடன் ஐபிஎல் போட்டிகளில் 3 ஆவது இடத்தில் தொடர்ந்து நீடிக்கின்றனர். மேலும் இதுவரை ஆடிய 10 போட்டிகளில் 6 முறை வெற்றிப்பெற்றுள்ளனர். இதற்கு மாறாக மும்பை இந்தியன்ஸ் அணி 10 போட்டிகளில் 6 முறை தோல்வியை சந்தித்து 8 புள்ளிகளுடன் 7 ஆவது இடத்திற்கு பின்தங்கியுள்ளது. இதனால் ப்ளே ஆஃப் க்கு தகுதிப்பெறுமா என்பதில் சந்தேகம் ஏற்பட்டு உள்ளதும் குறிப்பிடத்தக்கது.