ரோஹித்துக்கு தானாக வந்து உதவிய கோலி… ரசிகர்களை நெகிழ வைத்த சம்பவம்!

இந்திய கிரிக்கெட் அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றனர். நேற்று நடைபெற்ற இதற்கான முதல் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது. இதற்கிடையே கிரிக்கெட் களத்தில் நடைபெற்ற ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தை ரசிகர்கள் தற்போது உற்சாகத்தோடு பகிர்ந்துகொண்டு வருகின்றனர்.

நேற்றைய போட்டியில் முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் இந்திய வீரர்களின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறினர். இதனால் அடுத்தடுத்து 7 விக்கெட்டுகள் வீழ்ந்தது. அதிலும் கேப்டன் பொல்லாட்டின் டக் அவுட் சொந்த அணி வீரர்களையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அந்த அணியின் வீரர் ஹோல்டன் மட்டும் 57 ரன்களை எடுத்து அசத்தியிருந்தார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் வெறும் 176 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இதற்கிடையே சாஹல் வீசிய பந்தை வெஸ்ட் இண்டீஸ் வீரர் புருக்ஸ்ஸின் பேட்டில் பட்டு விக்கெட் கீப்பர் ரிஷப் பண்டின் கையில் சிக்கியது. ஆனால் இதைப்பார்த்த நடுவர் அவுட் கொடுக்காமல் இருந்தார். இதனால் ரிவியூ கேட்கலாமா? வேண்டாமா? என்று கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் இருவரும் தயக்கம் காட்டிவந்தனர். இதைப்பார்த்த கோலி நேரடியாக ரோஹித் சர்மாவிடம் வந்து ரிவியூ கேளுங்கள், பந்து பேட்டில் பட்டது எனக் கூறினார். இந்த ஆலோசனையை ஏற்று ரோஹித் சர்மா ரிவியூ கேட்டார். தொடர்ந்து DRSஇல் அது விக்கெட் எனவும் உறுதியானது. இந்தச் சம்பவம் கிரிக்கெட் வீரர்களிடையே பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியது.

முன்னதாக ரோஹித் சர்மாவிற்கும் கோலிக்கும் இடையே கேப்டன்சி தொடர்பாக மனஸ்தாபம் இருந்துவந்ததாகவும் இதனால்தான் கோலி முதலில் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் போட்டியில் கலந்துகொள்ள மறுத்தார் என்றும் கூறப்பட்டது. ஆனால் இதற்கு மாறாக நேற்று கிரிக்கெட் களத்தில் கோலி, ரோஹித்துடன் சகஜமாக உதவியது பலருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் இந்திய அணி வெறும் 28 ஓவர்களில் வெற்றிப் பெற்றுள்ளனர். மேலும் இந்திய அணிக்கு இது 1,000 ஆவது சர்வதேசப் போட்டி என்பதாலும் ரோஹித் சர்மாவிற்கு முதல் கேப்டன்சி போட்டி என்பதாலும் விறுவிறுப்பு காணப்பட்டது. இதேநேரத்தில் வெறும் 8 ரன்களுக்கு அவுட்டாகி ஏமாற்றிய கோலி ஒருநாள் போட்டியில் 5,000 ரன்களை வேகமாகக் கடந்தவர் என்ற சாதனையையும் படைத்திருக்கிறார்.