குழந்தைகளைத் தாக்கும் மர்மக்காய்ச்சல்... வடமாநிலங்களில் தொடரும் பீதி!
- IndiaGlitz, [Wednesday,September 15 2021]
உத்திரப்பிரதேசத்தின் ஆக்ரா, ஃபிரோசாபாத், ஆக்ரா, பிரயாக்ராஜ், மதுரா உள்ளிட்ட 6 மாவட்டங்களில் தற்போது குழந்தைகளுக்கு அதிகளவில் மர்மக்காய்ச்சல் பரவி வருவதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இதில் பலருக்கு டெங்கு உறுதிச்செய்யப்பட்ட நிலையில் சிலருக்கு காய்ச்சலின் தன்மை குறித்து விளக்க முடியாத அசாதாரணமான சூழலும் ஏற்பட்டு இருக்கிறது.
அந்த வகையில் ஃபிரோசாபாத் நகரில் மட்டும் கடந்த செப்டம்பர் 14 வரை மர்மக்காய்ச்சலால் 60 பேர் உயிரிழந்து உள்ளனர். இதில் பாதிபேர் குழந்தைகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதைத்தவிர தீவிர காய்ச்சல் அறிகுறிகளோடு இந்த நகரத்தில் 465 குழந்தைகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
மேலும் பிரயாக்ராஜ் நகரில் 97 பேர் காய்ச்சல் அறிகுறிகளோடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகக் கூறப்படுகிறது. ஆக்ராவில் 35 பேருக்கு டெங்கு உறுதிச்செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். உத்திரப்பிரதேரசத்தில் ஏற்பட்டுள்ள டெங்கு பீதியால் சுகாதாரப் பணியாளர்கள் பலரும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் வீடு, பொது இடங்களில் காணப்படும் சுகாதாரமற்ற நிலைமையை அவர்கள் சரிசெய்து வருகின்றனர்.
உ.பி.யைத் தவிர மேற்கு வங்களாத்தில் உள்ள சிலகுரி பகுதியில் 70 குழந்தைகள் டெங்கு அறிகுறிகளோடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் 139 குழந்தைகளுக்கு டெங்கு உறுதிச்செய்யப்பட்டு இருக்கிறதாம். ஹரியாணாவின் பல்வால் பகுதியில் காய்ச்சல் அறிகுறிகளோடு நூற்றுக்கணக்கான மக்கள் மருத்துவமனைகளை நோக்கி படையெடுத்து வருகின்றன். அதில் 2 பேர் உயிரிழந்து உள்ளனர்.
கொரக்பூரில் 6 பேருக்கு டெங்கு உறுதிச்செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மும்பை மாநகரில் மட்டும் 85 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் வடமாநிலங்களில் காய்ச்சல் அறிகுறி, டெங்கு பற்றிய பயம் மக்களை கடும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.