நடிகர் விவேக்கின் விவேகமான சமூக சேவை

  • IndiaGlitz, [Friday,August 18 2017]

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கு பின்னர் நகைச்சுவையில் சமுதாயத்தில் உள்ள குறைகள் குறித்த விழிப்புணர்வை புகுத்தியதால்தான் சின்னக்கலைவாணர் என்ற பட்டம் நடிகர் விவேக் அவர்களுக்கு கிடைத்தது. தான் நடிக்கும் படத்தில் முடிந்தவரை பெரியாரின் பகுத்தறிவு கருத்துக்களை விவேக் புகுத்தி வந்தார்.
மேலும் முன்னாள் ஜனாதிபதியும் விஞ்ஞானியுமான அப்துல்கலாம் அவர்களின் வேண்டுகோளின்படி தமிழகத்தில் ஒருகோடி மரங்களை நடும் பணியிலும் அவர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக மத்திய, மாநில அரசுகள் ஏற்படுத்தும் விழிப்புணர்வு கழிப்பிடம். இந்தியாவில் உள்ள எல்லா வீடுகளிலும் கழிப்பிடம் இருக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் அரசு பலதிட்டங்களள நிறைவேற்றி வருகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள பல பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லாத நிலை கண்ட நடிகர் விவேக், அனைத்து பள்ளிகளிலும் கழிப்பறை கட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதற்காக பெரிய பட்ஜெட் படங்கள் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் தாராளமாக நிதியுதவி செய்து உதவிட வேண்டும் என்று சமீபத்தில் நடந்த திரைப்பட விழா ஒன்றில் வேண்டுகோள் விடுத்தார். அவருடைய வேண்டுகோளுக்கு முதல் பயனாக ரூ.10 லட்சம் தரத்தயார் என தயாரிப்பாளர் தாணு அறிவித்துள்ளார். தாணுவை போன்று பெரிய தயாரிப்பாளர்கள் முன்வந்து பெரிய தொகையை அளித்தால் நிச்சயம் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கழிப்பறை வசதியை ஏற்படுத்தலாம். விவேக்கின் இந்த நல்ல முயற்சி வெற்றி பெற நமது வாழ்த்துக்கள்