பதவியேற்ற பத்து நிமிடத்தில் வன்முறை. ஓபிஎஸ் வீடு மீது கல்வீச்சு

  • IndiaGlitz, [Thursday,February 16 2017]

சசிகலா ஆதரவு அணியின் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக சட்டமன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டு கவர்னரின் அழைப்பின் பேரில் கடந்த சில மணி நேரங்களுக்கு முதல்வராக பதவியேற்றார். அவர் பதவியேற்ற சில நிமிடங்களில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கும், சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம் ஆதரவாளர்களுக்கும் இடையே ஓபிஎஸ் வீடு அருகே வாக்குவாதம் முற்றியது. இதனால் ஓபிஎஸ் வீடு மீது கல்வீச்சு சம்பவம் நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஓபிஎஸ் ஆதரவாளர் கேபி முனுசாமி கூறுகையில், 'சட்டத்தை காக்க வேண்டிய சட்ட அமைச்சரின் ஆதரவாளர்களே வன்முறையில் ஈடுபடுகின்றனர். பதவியேற்ற 10 நிமிடத்தில் காழ்ப்புணர்ச்சியால் வன்முறை நடத்துகின்றனர். சசிகலா குடும்பத்துக்கு எதிராக தர்மயுத்தம் தொடங்கியுள்ளோம். இந்த யுத்தத்தில் வெற்றி பெற்று இந்த ஆட்சியை இறக்காமல் ஓய மாட்டோம். சொந்த கட்சிக்காரர்களை தாக்குபவர்கள் சட்டம் ஒழுங்கை எப்படி பாதுகாப்பார்கள், இதுபோன்ற சம்பவம் மேலும் நடக்கக்கூடாது' என்று கூறியுள்ளார். இந்த சம்பவத்தை அடுத்து முதல்வரின் வீடு உள்ள க்ரீன்வேஸ் சாலையீல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றவுடன் ஓபிஎஸ் காரில் இருந்த சைரன் மற்றும் தேசிய கொடி அகற்றப்பட்டது என்பதும் அவருக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பும் திரும்ப பெறப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.