மீண்டும் திரையில் கார்த்திக்-ஜெஸ்ஸி. கவுதம் மேனன் தகவல்

  • IndiaGlitz, [Tuesday,August 18 2015]

சிம்பு, த்ரிஷா நடிப்பில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான 'விண்ணை தாண்டி வருவாயா' படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தயாரிக்கும் எண்ணம் தனக்கு இருப்பதாக இயக்குனர் கவுதம் மேனன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.


கவுதம் மேனன் தயாரித்த 'தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும்' என்ற படத்தின் தெலுங்கு பதிப்பான 'கூரியர்பாய் கல்யாண்' என்ற படத்தின் புரமோஷன் விழா ஐதராபாத்தில் நடந்தது. இந்த விழாவில் கலந்து கொண்ட கவுதம் மேனன், தான் இயக்கிய படங்களில் மிகவும் பிடித்த காதல் படமான 'விண்ணை தாண்டி வருவாயா' படத்தின் கார்த்திக் மற்றும் ஜெஸ்ஸியை மீண்டும் திரையில் காண பல ரசிகர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், அவர்களின் விருப்பத்திற்கு இணங்க இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை விரைவில் இயக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

தற்போது கவுதம் மேனன், சிம்பு நடிப்பில் 'அச்சம் என்பது மடமையடா' என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை முடித்தவுடன் அவர் 'விண்ணைத் தாண்டி வருவாயா 2' படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் 'தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும்' என்ற திரைப்படம் வரும் செப்டம்பர் 11ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.