நீட் தேர்வு தோல்வி எதிரொலி: விழுப்புரம் மாணவி தற்கொலை
- IndiaGlitz, [Tuesday,June 05 2018]
கடந்த ஆண்டு நீட் தேர்வில் வெற்றி பெறாத காரணத்தால் அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த ஆண்டும் நீட் தேர்வில் தோல்வி அடைந்த விரக்தியால் விழுப்புரம் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
நீட் தேர்வின் முடிவுகள் நேற்று வெளியான தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய 1.14 லட்சம் மாணவர்களில் வெறும் 45 ஆயிரம் பேர் மட்டுமே தேர்வு பெற்றுள்ளனர். இந்த நிலையில் நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் பிரதீபா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டதாக வெளிவந்திருக்கும் செய்தி அதிர்ச்சியை அளிக்கின்றது.
விழுப்புரம் மாவட்டம் சேத்துப்பட்டை அடுத்த பெருவளூர் என்ற கிராமத்தை சேர்ந்த பிரதீபா சிறுவயது முதலே மருத்துவர் கனவுடன் இருந்தவர். 10ஆம் வகுப்பில் 495 மதிப்பெண்களும், 12ஆம் வகுப்பு தேர்வில் 1125 மதிப்பெண்கள் பெற்றிருந்த நிலையில் கடந்த ஆண்டு நீட் தேர்வை பிரதிபா எழுதினார். கடந்த ஆண்டு அவருக்கு சித்தா மருத்துவ படிப்பில் இடம் கிடைத்துள்ளது. ஆனால் அதையும் தவிர்த்து, டாக்டர் ஆகும் கனவுடன் இந்த வருடமும் நீட் தேர்வை எழுதிய பிரதிபா, நீட் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. இதனால் தனது டாக்டர் கனவு தகர்ந்ததை எண்ணி அதிர்ச்சி அடைந்த பிரதீபா எலி மருந்தை குடித்தார். ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சையின் பலனின்றி மரணம் அடைந்தார். அவருடைய மறைவு தமிழக மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.