குழந்தையின் ஆன்லைன் வகுப்புக்காக பசு மாட்டை விற்ற நபருக்கு உதவி செய்த பிரபல நடிகர்

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருப்பதால் தற்போது ஆன்லைன் வகுப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த ஆன்லைன் வகுப்புகளுக்கு கம்ப்யூட்டர், லேப்டாப் அல்லது ஸ்மார்ட்போன் அவசியம் என்ற நிலையில் பல ஏழை எளிய மக்கள் இந்த வசதி இல்லாமல் உள்ளனர்

இந்த நிலையில் இமாச்சல பிரதேசத்தில் சேர்ந்த கும்மர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் குல்தீப் குமார் தனது குழந்தைகளின் ஆன்லைன் வகுப்புக்காக ஸ்மார்ட்போன் வாங்குவதற்காக பணத்தை தயார் செய்ய முயற்சி செய்தார். ரூபாய் 6 ஆயிரம் மதிப்புள்ள ஸ்மார்ட் போன் வாங்குவதற்கு அவரால் 500 ரூபாய்கூட திரட்ட முடியவில்லை. இதனால் கடும் வருத்தத்தில் இருந்த அவர் வங்கிகள் உட்பட பல்வேறு இடங்களில் உதவி கேட்டார். ஆனால் யாரும் இவருக்கு உதவி செய்ய முன்வரவில்லை.

பின்னர் வேறு வழியில்லாமல் தனது குடும்பத்தினர்களில் ஒன்றாக வளர்த்து வந்த பசு மாட்டை 6000 ரூபாய்க்கு விற்று தனது குழந்தைகளின் படிப்பிற்காக ஸ்மார்ட்போன் வாங்கிக் கொடுத்தார். இதுகுறித்த தகவல் அனைத்து ஊடகங்களிலும் பரபரப்பாக வெளியானது. இதனை அடுத்து கொரோனா வைரஸால் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட பலருக்கு உதவி செய்து வரும் பிரபல நடிகர் சோனு சூட் இந்த நபருக்கும் தான் உதவி செய்ய விரும்புவதாகவும் அவருடைய பசு மாட்டைத் மீட்டுக் கொடுக்க விரும்புவதாகவும் அவருடைய தகவல்களை அனுப்பும் படியும் கேட்டுக் கொண்டுள்ளார். இதனை அடுத்து பத்திரிக்கையாளர்கள் அவருடைய முகவரி உள்பட தகவல்களை அனுப்பி உள்ளதாகவும் அவருடைய பசுமாடு மீண்டும் அவருக்கு கிடைக்க நடிகர் சுறுசுறுப்பு உதவி செய்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் தமிழர்கள் உள்பட ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் அவரவர் சொந்த ஊர் திரும்ப கோடிக்கணக்கில் உதவி செய்த நடிகர் சோனுசூட், தற்போது இந்த உதவியும் செய்து உள்ளதை அடுத்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. படங்களில் அவர் வில்லனாக நடித்தாலும் நிஜத்தில் அவர் ஹீரோ என்று பலரும் பாராட்டி வருகின்றனர்.