விடுமுறையில் விமானம் தயாரித்த பள்ளி மாணவன்… வியந்து பாராட்டும் கிராம மக்கள்!
- IndiaGlitz, [Saturday,July 17 2021]
கொரோனா காலத்தை விடுமுறை மாதிரிதான் பெரும்பாலான மாணவர்கள் கருதி வருகின்றனர். இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே 12ஆம் வகுப்பு படித்து வரும் பள்ளி மாணவன் முத்துகுமார் என்பவர் தனக்கு கிடைத்த நேரத்தை முறையாகப் பயன்படுத்தி பேட்டரியால் இயங்கும் குட்டி விமானம் ஒன்றை உருவாக்கி உள்ளார்.
சிறு வயதிலேயே தந்தையை இழந்த முத்துகுமாருக்கு அறிவியல் மீது தீராத ஆர்வம். அதோடு விமானத்தில் பறக்க வேண்டும் என்றும் அவருக்கு கொள்ளை ஆசையாம். ஆனால் வறுமையில் தவித்துவரும் முத்துகுமாரால் அது முடியாது. இந்நிலையில் கொரோனா காரணமாக தற்போது முத்துகுமார் வீட்டிலேயே ஆன்லைன் வகுப்புகளை கவனித்து வருகிறார். மேலும் ஆன்லைன் வகுப்புகளைத் தவிர ஆடு மேய்ப்பதற்கும் அதிக நேரத்தை செலவிடுகிறாராம்.
இந்நிலையில் 12 வகுப்பு படிக்கும் முத்துகுமாருக்கு திடீரென விமானம் செய்ய வேண்டும் என ஆர்வம் ஏற்பட்டு இருக்கிறது. இதற்காக தனது வீட்டில் கிடந்த பழைய பொருட்களை எல்லாம் திரட்டி ஒரு வழியாக குட்டி விமானத்தை உருவாக்கி இருக்கிறார். இந்த விமானத்தை இயக்க வைப்பதற்காக இரண்டு பக்கங்களிலும் பேட்டரிகளைக் கொண்டு இறக்கைகளை உருவாக்கி இருக்கிறார். மேலும் ஆன்லைனில் சில பொருட்களை வாங்கி விமானத்தை இயக்க வைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறார்.
வறுமையிலும் முயற்சியை கைவிடாத முத்துகுமாரின் ஆவர்த்தைப் பார்த்த பொதுமக்கள் அனைவரும் அவருக்கு பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். மேலும் அறிவியல் விஞ்ஞானியாக மாற வேண்டும் என்ற அவரது ஆர்வத்தையும் அவர்கள் பாராட்டி வருகின்றனர்.