பெண்ணின் படிப்புக்காக பஞ்சாயத்து எடுத்த அதிரடி முடிவு… வியப்பூட்டும் சம்பவம்!
- IndiaGlitz, [Monday,August 02 2021]
பீகார் மாநிலத்தில் திருமணம் முடிந்த இளம்பெண் ஒருவர், தான் படிக்க வேண்டும் என விரும்பியதால், கணவரை நிரந்தரமாகப் பிரிந்துவிட்டு படிப்பை தொடருமாறு அந்த ஊர் பஞ்சாயத்து, அதிரடி தீர்ப்பு அளித்து இருப்பது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
பாகல்பூர் மாவட்டம் கோர்காட் எனும் பகுதியைச் சேர்ந்த சுனில்குமார் என்பவருக்கும் ஜஹாங்கீர் பகுதியைச் சேர்ந்த நேகா என்பவருக்கும் கடந்த மாதம் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்று இருக்கிறது. இந்நிலையில் 12 ஆம் வகுப்பை முடித்திருக்கும் நேகா தான் படிக்க விரும்புவதாக தனது மாமியார் வீட்டில் கூறியிருக்கிறார். அதற்கு சம்மதம் கிடைக்காத நிலையில் வீட்டை விட்டே ஓடியுள்ளார்.
இந்நிலையில் தனது மகள் காணாமல் போய்விட்டார் எனுற நேகாவின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து நேகா தன்னுடைய கிராமப் பஞ்சாயத்துத் தலைவரின் வீட்டிற்கே சென்று தனக்கு நியாயம் வேண்டும் எனக் கேட்டுள்ளார். இதைக்கேட்ட பஞ்சாயத்து தலைவர் இருவீட்டாரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார். ஆனால் பிறந்த வீடு, புகுந்த வீடு என இருவீட்டாரும் பெண் படிப்பதை விரும்பவில்லை.
இதனால் கடும்கோபம் அடைந்த நேகா, நான் படிப்புக்காக விவகாரத்து பெற விரும்புகிறேன். எங்களது திருமணத்தை முறித்துவிடுங்கள் எனக் கேட்டிருக்கிறார். இந்தக் கோரிக்கையை ஏற்ற பஞ்சாயத்தார் பெண்ணின் படிப்புக்காக திருமண உறவையும் முறித்து அவரைத் தொடர்ந்து படிக்குமாறு அறிவுறுத்தி இருக்கின்றனர். இந்தச் சம்பவம் சோஷியல் மீடியாவில் கவனம் பெற்றிருக்கிறது.