கடந்த ஆண்டு ’இறுதி சுற்று’ படத்தின் வெற்றியுடன் அசத்தலான மறுவருகை புரிந்த மாதவ்னும் தொடர்ந்து பலவகையான படங்களில் நடித்து ரசிகர்களின் நன்மதிப்பைப் பெற்றிருக்கும் விஜய் சேதுபதியும் இணைந்திருக்கும் படம் ‘விக்ரம் வேதா’. நீண்ட இடைவெளிக்குப் பிறகு புஷ்கர்-காயத்ரி இணையர் இயக்கியிருக்கிறார்கள். படத்தின் ப்ரமோக்கள் அனைத்தும் கதையையும் கதாபாத்திரங்களையும் ஊகிக்கவைத்தன. அதுவே படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிப்பதாகவும் அமைந்தது. அந்த எதிர்பார்ப்பை படம் நிறறைவேற்றுகிறதா என்பதை விமர்சனத்தில் தெரிந்துகொள்வோம்.
விக்ரம் (மாதவன்) ஒரு என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட். 16 கொலைகள் செய்துவிட்டு தலைமறைவாக இருக்கும் வேதா (விஜய் சேதுபதி) என்ற ரவுடியை பிடிப்பதற்காக அமைக்கப்பட்ட போலீஸ் தனிப்படைக்கு தலைமை தாங்குகிறான் விக்ரம். அந்தப் படை வேதாவின் அடியாட்கள் சிலரைக் கொல்கிறது தீயவர்களைக் கொல்வதில் தவறில்லை என்ற எண்ணம் கொண்டவன் விக்ரம். தான் நியாயத்தின் பக்கம் நிற்கிறோம் என்ற கர்வம் கொண்டவன்.
இந்நிலையில் திடீரென்று ஒரு நாள் போலீசிடம் சரணடைகிறான் வேதா. ஜாமீனில் வெளியேறுகிறான். மீண்டும் வேதாவைப் பிடிக்கிறான் விக்ரம். மீண்டும் தப்பிக்கிறான் வேதா. இருவருக்குமிடையிலான கண்ணாமூச்சி விளையாட்டு தொடர்கிறது.
ஆனால் ஒவ்வொருமுறை விக்ரமை சந்திக்கும்போதும் அவனிடம் தன் முன்கதையிலிருந்து ஒரு கதையைச் சொல்லி அதன் மூலம் எது நல்லது எது கெட்டது என்ற விக்ரமின் நம்பிக்கையை அசைக்கிறான் வேதா. இதனால் விக்ரமுக்கு சில உண்மைகள் புலப்படுகின்றன. அந்த உண்மைகளைத் தெரிந்துகொண்ட பின் விக்ரம் செய்வது என்ன? கடைசியில் விக்ரமுக்கும் வேதாவுக்கு என்ன ஆனது? இந்தக் கேள்விகளுக்கு விடைதெரிய திரையரங்குகளுக்குச் சென்று படம் பாருங்கள்.
தமிழ் சினிமாவில் பல இரட்டை கதாநாயகர்கள் படங்களைப் பார்த்திருக்கிறோம். பல போலீஸ்-ரவுடி மோதல் படங்களைப் பாத்திருக்கிறோம். இவை அனைத்துமே நல்ல போலீஸ், கெட்ட போலீஸ், கெட்ட ரவுடி, நல்ல ரவுடி ஆகியவர்களைத்தான் காட்டியிருக்கின்றன. ஆனால் நிஜத்தில் யார் நல்லவன் யார் கெட்டவன் என்பதை அவ்வளவு எளிதாக வரையறுத்துவிட முடியாது. ஒரு போலீஸ் நல்லவனாக இருந்துகொண்டே தப்பு செய்ய முடியும். ஒரு ரவுடி கெட்டது செய்தாலும் நல்லவனாக இருக்க முடியும். புகழ்பெற்ற விக்ரமாதித்யன் - வேதாளம் கதை அமைப்பை எடுத்துக்கொண்டு இந்தக் கருத்தை அழுத்தம் திருத்தமாகச் சொல்லியிருப்பதில்தான் தனித்து நிற்கிறது ‘விக்ரம் வேதா’.
வாழ்வின் பெரும்பாலான தருணங்களில் நன்மைக்கும் தீமைக்குமான இடைவெளி மிக மிக மெல்லிய கோடாகவே இருக்கிறது என்பதுதான் படத்தின் மையக்கரு. அதை பல திருப்பங்கள் கொண்ட திரைக்கதை, அழுத்தமான வசனங்கள், வலுவான கதபாத்திரங்கள், சிறந்த நடிகர்கள். உயர்தரமான தொழில்நுட்ப அம்சங்கள் ஆகியவற்றைக் கொண்டு சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் சொல்லி இருக்கிறார்கள் இயக்குனர்கள் புஷ்கர்-காயத்ரி. அதோடு எது சரி எது தவறு என்பது பெரும்பாலும் குழப்பமானது என்பதை படத்தின் தொடக்கம் முதல் இறுதிவரை பல்வேறு உதாரணங்களுடன் விளக்கியிருக்கின்றனர். படத்தை இந்தக் குழப்பமான யதார்த்தத்துடனே முடித்திருப்பதும் கவித்துவமான விஷயம்.
போலீஸ் -ரவுடி என இரண்டு தரப்பு நியாயங்களையும் அவர்களின் தவறுகளையும் பதிவு செய்கிறது படம். பொதுவாக தமிழ் சினிமாவில் போலீஸ் படம் என்றால் ரவுடியின் மரணம் ஒரு வரி வசனமாகக் கடந்துவிடும். ரவுடிப் படம் என்றால் போலீஸின் மரணம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. படத்தில் ஒரு போலீஸ் அதிகாரியின் மரணம் ஏற்படுத்தும் துக்கம் முதல் பாதியில் சற்று விரிவாகக் காண்பிக்கப்படுகிறது. இரண்டாம் பாதியில் ரவுடி ஒருவனின் மரணமும் அதே அளவு துக்கத்தைப் பார்வையாளர்களுக்குக் கிடைத்துகிறது. இறந்தவர்கள் யாராக இருந்தாலும் இழப்பு ஒன்றுதான் என்ற மனிதநேயப் பார்வையை இதன்மூலம் கொண்டுவந்திருப்பது பாராட்டுக்குரிய விஷயம்.
வசனங்கள் படத்துக்கு ஆகப் பெரிய வலு சேர்க்கின்றன. படம் சொல்ல வரும் விஷயத்தை கச்சிதமாகப் பிரதிபலிக்கின்றன. “காந்தியோட அப்பா காந்தியா? கோட்ஸேவோட மகன் கொலைகாரனா” என்ற வசனம் குற்றவாளிகளின் மகன்கள் குற்றவாளிகளாகத்தான் உருவாவார்கள் என்ற பொதுப்புத்திப் பார்வையை உடைக்கிறது. இது போன்ற அர்த்தச் செறிவு நிறைந்த வசனங்கள் மட்டுமில்லாமக் ஜாலியாக ரசித்து கைதட்டி சிரிப்பதற்கான வசனங்களும் படத்தில் ஏராளமாக இருக்கின்றன.
இத்தனை நிறைகள் இருந்தாலும் இரண்டு பாதிகளிலும் பல காட்சிகள் தேவைக்கதிகமாக மெதுவாக நகர்வதும். இரண்டாம் பாதியில் ஒரு கட்டத்துக்கு மேல் ஏற்படும் தொய்வும் சற்று பொறுமையை சோதிக்கின்றன. இன்னும் யதார்த்தத்துக்கு இணையாக சொல்லியிருக்க வேண்டிய படத்தில் டூயட் பாடல்கள் உள்ளிட்ட சில கமர்ஷியல் புகுத்தல்களைத் தவிர்த்திருக்கலாம். விக்ரமின் மனைவியே வேதாவின் வக்கீலாக இருப்பதும் அதனால் கதையில் ஏற்படும் திருப்பங்களும் திரைக்கதையாசியரின் வசதிக்கேற்ற திணிப்புகளாகத் தெரிகின்றன. இதைக் கொஞ்சம் வேறுவிதமாக யோசித்திருக்கலாம்.
ஆனால் இந்தக் குறைகள் எல்லாம் சின்ன உறுத்தல்கள் மட்டுமே. படம் சொல்ல வரும் விஷயம் அது சொல்லப்பட்ட விதம் ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது இந்தக் குறைகள் பொருட்படுத்தத்தக்கவைஅல்ல.
மாதவன் -விஜய் சேதுபதி இருவருக்குமே இணையான முக்கியத்துவம் கொண்ட வேடங்கள். அதைச் சொல்லும் விதமாகத்தான் படம் தொடங்கும் முன் வரும் புகை மற்று மதுவுக்கு எதிரான பிரச்சார வாசகங்களை இருவரையுமே சொல்ல வைத்திருக்கிறார்கள்போலும். இரண்டு நடிகர்களுமே தங்கள் பாத்திரத்தின் தேவையை நன்கு உணர்ந்து மிகச் சரியான நடிப்பத் தந்திருக்கின்றனர்.
மாதவன் தன் நம்பிக்கைகள் தவிடுபொடியாகும்போது ஏற்படும் மனநிலையை கச்சிதமாக வெளிப்படுத்தி தான் ஒரு தேர்ந்த நடிகர் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார். ஒரு போலீஸ்காரராக அவரது மிடுக்கையும் துடிப்பையும் ரசிக்க பல காட்சிகள் உண்டு.
அதேபோல் விஜய் சேதுபதி ட்ரைலரை வைத்து எதிர்பார்த்ததைப் போலவே ஒரு வயதான ரவுடியைக் உடல்மொழியாலும் வசன உச்சரிப்பாலும் கண அசைவுகளாலும் கண்முன் நிறுத்துகிறார். எமோஷனல் காட்சிகளில் ஒரு இடத்திலும் ஓவர் ஆக்டிங் செய்துவிடாமல் அளவான எமோஷன்களை வெளிப்படுத்தி காட்சி ஏற்படுத்த வேண்டிய தாக்கத்தை ஏற்படுத்திவிடுகிறார். இவர்கள் இருவரும் இல்லை என்றால் இந்தப் படம் இவ்வளவு நன்றாக இருந்திருக்காது என்று சந்தேகமின்றிச் சொல்லலாம்.
ஷ்ரத்தா சாய்நாத், கதிர் இருவரும் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள். வரலட்சுமியின் தோற்றம் அவருக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்துக்கு சுத்தமாகப் பொருந்தவில்லை. அதனால் அந்தப் பாத்திரம் ஏற்படுத்தியிருக்க வேண்டிய தாக்கமும் குறைகிறது. மாதவனின் நண்பனாக பிரேமும், விஜய்சேதுபதியின் நண்பனாக ராஜ்குமாரும் மனதில் பதியும் நடிப்பைத் தந்திருக்கிறார்கள். மற்ற அனைவரும் ஏற்றுக்கொண்ட பாத்திரத்துக்கு நியாயம் செய்திருக்கிறார்கள்.
சாம் சி.எஸ் இசையில் பாடல்கள் ரசித்துக் கேட்கவைக்கின்றன. பின்னணி இசை பெரும்பாலும் பொருத்தமாக உள்ளது. விஜய் சேதுபதிக்கான தீம் பாடல் குறிப்பிட்டு பாராட்டும்படி உள்ளது. பி.எஸ்.வினோத்தின் ஒளிப்பதிவும் ரிச்சர்ட் கெவினின் படத்தொகுப்பும் இயகுனர்களின் கனவுக்கு திரையில் உருவம் கொடுப்பதில் தக்க துணைபுரிந்திருக்கின்றன.
மொத்தத்தில் சிறந்த கரு அதை சிறப்பாக சொல்லும் கதை-திரைகக்தை. அழுத்தமான வசனங்கள், தேர்ந்த நடிப்பு என ஒட்டுமொத்த திருப்திகொடுக்கும் படமாக அமைந்திருக்கிறது ‘விக்ரம் வேதா’.
Comments