மூன்று வருடங்களுக்கு பின் முடிவுக்கு வந்த விக்ரம் படம்: இயக்குனர் நன்றி!

மூன்று வருடங்களாக நடைபெற்று வந்த விக்ரம் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததாக இயக்குனர் தனது டுவிட்டரில் தெரிவித்து அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கிய திரைப்படம் ’கோப்ரா’. இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா வைரஸ் முதல், இரண்டாவது அலை காரணமாக தாமதம் ஆனது என்றும் இருப்பினும் இடையிடையே படப்பிடிப்பிற்கு அனுமதிக்கப்பட்ட நேரங்களில் நடந்தது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் கடந்த மாதம் விக்ரம் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்ததாக இயக்குனர் அஜய் ஞானமுத்து தெரிவித்திருந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவுக்கு வந்ததாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் விக்ரம் உள்பட படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி என்றும் இந்த மூன்று ஆண்டு காலத்தில் என் மேல் நம்பிக்கை வைத்து அனைவருக்கும் நன்றி என்றும் தெரிவித்துள்ளார். மேலும் ’கோப்ரா’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

விக்ரம் ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ள இந்த படத்தில் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், மியா, கே.எஸ்.ரவிகுமார், கனிகா, மிருளாணி ரவி, ஆனந்த்ராஜ், ரேணுகா, ரோபோசங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் என்பதும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.