விக்ரம் நடிக்கும் ஹிந்தி படம் குறித்த மாஸ் தகவல்

  • IndiaGlitz, [Wednesday,June 10 2020]

கோலிவுட் திரையுலகில் மாஸ் நடிகர்களாக இருப்பவர்கள் கூட பாலிவுட்டில் ஹிந்தி திரைப்படங்களில் ஜொலிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் விக்ரம் தற்போது பாலிவுட் திரையுலகில் மீண்டும் காலடி எடுத்து வைக்க உள்ளார்.

விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகிவரும் ’கோப்ரா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்பால் படப்பிடிப்பை உடனடியாக முடித்துக்கொண்டு படக்குழுவினர் நாடு திரும்பினார். இந்த படத்தில் ஒரு சில காட்சிகள் ரஷ்யாவில் இன்னும் எடுக்கப்பட வேண்டி இருந்தாலும் தற்போது ரஷ்யா இருக்கும் நிலையில் அங்கு படப்பிடிப்பு நடத்துவது என்பது இயலாத காரியம் என்பதால் சென்னையிலேயே கிரீன் ஸ்கிரீன் வைத்து இந்தப் படத்தின் மீதி பகுதியை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ’கோப்ரா’ திரைப்படம் தற்போது ஹிந்தியில் டப் செய்யப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் ஹிந்தி டப்பிங் உரிமையை கோல்டு மைன்ஸ் கார்ப்பரேஷன் என்ற நிறுவனம் வாங்கி இருப்பதாகவும் இந்த படத்தின் ஹிந்தி டப்பிங் பணிகளும் விரைவில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே மணிரத்தினம் இயக்கிய ’ராவண்’ மற்றும் ‘டேவிட்’ ஆகிய இந்தி திரைப்படங்களில் விக்ரம் நடித்திருக்கிறார் என்றாலும் ’கோப்ரா’ படத்தின் மூலம் மீண்டும் மாஸ் ஆக பாலிவுட் திரையுலகில் விக்ரம் களமிறங்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது