விக்ரம் மீதான குற்றச்சாட்டுக்கு FIA விளக்கம் : நியூயார்க் விழாவில் நடந்தது என்ன?
- IndiaGlitz, [Wednesday,August 24 2016]
அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கில் நகரில் நடைபெற்ற இந்திய சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் சீயான் விக்ரம் ஒரு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த விழாவின்போது அபிஷேக் பச்சன் உள்பட பல நடிகர்கள் அன்பாக நடந்து கொண்ட நிலையில் விக்ரம் திமிராக நடந்து கொண்டதாகவும், செல்பி எடுக்க வந்த்வர்களை அவர் தவிர்த்த்தாகவும், இந்த நிகழ்ச்சிக்கு விக்ரமை அழைத்ததற்காக வெட்கப்படுவதாகவும் அமெரிக்க தமிழ் சங்க தலைவர் பிரகாஷ் எம் சுவாமி என்பவர் தனது சமூக வலைத்தளத்தில் குற்றச்சாட்டு ஒன்றை கூறியிருந்தார்.
ஆனால் இந்த குற்றச்சாட்டு பொய்யானது என ஏற்கனவே விக்ரம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த விழாவை நடத்திய 'பெடரேஷன் ஆப் இந்தியன் அசோசியேஷன் என்ற அமைப்பு இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது.
இந்திய சுதந்திர தின விழாவில் பலவிதமான பணிகளுக்கு இடையே வந்து கலந்து கொண்ட விக்ரமிற்கு எங்கள் நன்றி. அவர் ஒரு நடிகராக மட்டுமின்றி ஒரு நல்ல இந்திய குடிமகனாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அவர் கண்ணியமாக நடந்து கொண்டார் என்பது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் தெரியும். ஆனால் பிரகாஷ் எம்.சுவாமி தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ள கருத்துக்கள் உண்மைகு மாறானது மட்டுமின்றி கற்பனையானது. மேலும் FIA மற்றும் Times Network அமைப்புகள் மூலமே விக்ரமிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த இரு அமைப்புகளுக்கும் பிரகாஷ் சுவாமிக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. விக்ரமுக்கு இந்த விஷயத்தில் மிகுந்த மனவருத்தம் இருந்திருக்கும் என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது' என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் பிரகாஷ் எம்.சுவாமி தெரிவித்த கருத்துக்கு தொடர்ந்து கண்டனங்கள் எழுந்ததால் அவர் அந்த பதிவை நீக்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.