விஜய்மல்லையா எந்நேரத்திலும் இந்தியாவிற்கு வரலாம்!!! தகவல் தெரிவித்த அமலாக்கத்துறை!!!
- IndiaGlitz, [Thursday,June 04 2020]
கிங்க் ஃபிஜர் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி மற்றும் இந்தியாவின் பிரபல தொழிலதிபராக இருந்த விஜய் மல்லையா பண மோசடியில் ஈடுபட்டதாகப் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இந்தியாவில் உள்ள 17 பொதுத்துறை நிறுவனங்களில் சுமார் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொகையைக் கடனாக வாங்கி திரும்பி செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டதாக சிபிஐ மற்றும் இந்திய அமலாக்கத்துறையானது, விஜய் மல்லையா மீது வழக்குப் பதிவு செய்திருக்கிறது. இந்நிலையில் பல்வேறு வழக்குகளில் நீதிமன்றங்களில் ஆஜராக வேண்டிய நிலைமை ஏற்பட்ட போது கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தியாவை விட்டு விஜய் மல்லையா தப்பிச்சென்றார்.
தப்பிச் சென்ற விஜய்மல்லையாவை மீண்டும் இந்தியா கொண்டு வருவதற்கான நடவடிக்கையில் இந்திய அரசு மேற்கொண்டது. இந்நிலையில் லண்டனில் இருக்கும் விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கான செயல்பாடுகளில் இந்திய அமலாக்கத்துறை கடந்த ஆண்டு முதலே ஈடுபட்டு வருகிறது. தன்னை லண்டனில் இருந்து திருப்பி அனுப்ப வேண்டாம் என்றும் அங்கு சிறை மிகவும் மோசமான நிலையில் இருக்கும் என்றும் பல்வேறு வழக்குகளை இங்கிலாந்து நீதிமன்றத்தில் விஜய் மல்லையா தொடுத்து இருந்தார். இந்த வழக்குகளை விசாரித்த இங்கிலாந்து நீதிமன்றம் கடந்த மே 14 ஆம் தேதி அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. எனவே சட்டப்பூர்வமாக லண்டனில் தங்குவதற்கு அவருக்கு உரிமையில்லை எனவும் கூறப்படுகிறது.
ஒருவேளை விஜய்மல்லையா இங்கிலாந்து நீதிமன்றத்தில் கருணை மனுவை கோருவதற்கான சட்ட வாய்ப்புகள் இருக்கலாம் எனவும் கருத்துக்கள் தெரிவிக்கப் பட்ட நிலையில், அதற்கு வாய்ப்பு இல்லை என்றே இந்திய அமலாக்கத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர். சட்டப்பூர்வமான நிலையில் இங்கிலாந்தில் தங்குவதற்கு மட்டுமே அவர் விரும்புவதாகக் கூறப்படுகின்றன. இங்கிலாந்தில் தங்குவதற்கான எந்த சட்ட விதிமுறைகளும் இல்லாமல் அங்கு அவரால் நிறைய நாள் தங்க முடியாது. எனவே தானாகவே அங்கிருந்து இந்தியா வருவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்தியாவை விட்டு வேறு நாடுகளுக்குத் தப்பிச் சென்ற குற்றவாளிகளை நாடு கடத்துவதற்கான சட்டத்தில் இந்தியா கடந்த 1993 ஆம் ஆண்டு கையெழுத்திட்டு இருக்கிறது. எனவே விஜய் மல்லையா ஒருவேளை தானாக வராவிட்டாலும் அவரை நாடு கடத்தும் பணியில் இந்தியா இறங்கும் எனவும் அமலாக்கத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர். விஜய் மல்லையா இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டவுடன் மும்பை நகருக்கு அருகே உள்ள ஆர்தர் ரோடில் அமைந்திருக்கும் இரண்டு அடுக்கு மாடிக்கொண்ட சிறைச்சாலையில் அவர் தங்க வைக்கப்படுவார் என்றும் அங்கு அதிக பாதுகாப்பு போடப்படும் என்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.