ரஜினி, கமல் நடிகர் சங்க தேர்தலையே சந்தித்ததில்லை: விஜயகாந்த் மகன்
- IndiaGlitz, [Monday,March 02 2020]
ரஜினி, கமல் ஆகிய இருவரும் இணைந்து நடிகர் சங்க தேர்தலை கூட சந்தித்தது இல்லை என்றும் அவர்கள் எப்படிப் சட்டமன்ற தேர்தலை சந்திப்பார்கள் என்றும் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் கலாய்த்து பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையை அடுத்த மணப்பாக்கத்தில் தேமுதிக விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய விஜயபிரபாகரன் ’ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் ஒன்றாக நடித்தார்கள். ஆனால் அவர்களுக்குள் பெரிய விரிசல் ஏற்பட்டு இருவரும் இணைந்து நடிக்கவில்லை. தற்போது தமிழக அரசியலில் இருவரும் இணைந்து செயல்பட இருப்பதாக கூறுகின்றனர். அவ்வாறு அவர்கள் இணைந்து செயல்பட வாய்ப்பே இல்லை.
ரஜினி, கமல் இருவரும் இணைந்து நடிகர் சங்க தேர்தலை கூட இன்னும் சந்தித்தது இல்லை அவ்வாறு இருக்கும்போது அரசியல் தேர்தலை அவர்கள் எவ்வாறு சந்திப்பார்கள்? மேலும் ரஜினிகாந்த் இன்னும் கட்சி கூட ஆரம்பிக்கவில்லை என்று கூறினார்.
மேலும் ரஜினியும் கமலும் சினிமாவில் ஜாம்பவான்களாக இருக்கலாம். ஆனால் மக்கள் மன்றத்தில் நிற்க ஒரு தைரியம் வேண்டும். அந்த தைரியம் இருவருக்கும் இல்லை. மக்களுக்கு ஏதாவது செய்தால் மட்டுமே மக்கள் வரவேற்பார்கள். அந்த வகையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இப்போதும் சிங்கமாக தான் இருக்கிறார். அவர் வெளியே வரும்போது தமிழக அரசியலில் ஒரு பிரளயமே ஏற்படும். தேமுதிகவுக்கு இனிமேல் ஏறுமுகம்தான் என்று விஜயபிரபாகரன் அந்த விழாவில் பேசினார். ரஜினி கமல் குறித்து விஜயகாந்த் மகனின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.