கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு விஜய்காந்த் செய்த மிகப்பெரிய உதவி

இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து மாநிலங்களும் கொரோனாவால் திண்டாடி வரும் நிலையில் அரசின் நடவடிக்கைக்கு உதவி செய்யும் வகையில் திரையுலக பிரபலங்கள் உள்பட பலர் கோடிக்கணக்கிலும் லட்சக்கணக்கிலும் நிதியுதவி செய்து வருகின்றனர்

அந்த வகையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு மிகப்பெரிய உதவி செய்துள்ளார். இதன்படி சென்னையில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தை கொரோனா சிகிச்சை மையமாக பயன்படுத்த அனுமதி அளித்துள்ளார். அதேபோல் கொரோனா பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்க தனது கல்லூரியையும் பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொரோனாவிற்கு எதிராக மத்திய மாநில அரசுகள்‌ எடுத்து வரும்‌ நடவடிக்கைக்கு தேமுதிக ஆதரவு தெரிவித்து வருகிறது. காஞ்சிபுரம்‌ மாவட்டத்தில்‌ கொரோனாவால்‌ பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும்‌ வகையில்‌, ஆண்டாள்‌ அழகர்‌ பொறியியல்‌ கல்லூரியையும்‌, சென்னையில்‌ பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேமுதிக தலைமை கழகத்தையும்‌ தமிழக அரசு பயன்படுத்தி கொள்ள வேண்டும்‌ என கேட்டு கொள்கிறேன்‌. கொரோனாவால்‌ பாதிக்கப்பட்ட மக்களுக்கு அந்தந்த வார்டுகளில்‌ வசிக்கும்‌ தேமுதிக நிர்வாகிகள்‌, தொண்டர்கள்‌ அனைவரும்‌ அத்தியாவசியப்‌

பொருட்களான உணவு காய்கறி, உடை, மருந்து, முககவசம்‌ உள்ளிட்ட நிவாரணப்‌ பொருட்களை வழங்க வேண்டும்‌. துப்புரவு பணியாளர்களுக்கும்‌, தேவையான உபகரணங்களை வழங்க வேண்டும்‌.ஊரடங்கு உத்தரவால்‌ பெரிதும்‌ பாதிக்கப்பட்டுள்ள ஆட்டோ, ஷேர்‌ஆட்டோ ஓட்டுனர்களின்‌ குடும்பத்தினருக்கும்‌ மற்றும்‌ வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும்‌ தினக்கூலி தொழிலாளர்களின்‌ குடும்பத்தினருக்கும்‌ தங்களால்‌ இயன்ற உதவிகளை செய்ய வேண்டும்‌.

இவ்வாறு விஜயகாந்த் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.