ஆங்கிலம் தெரியாதவர் எதற்கு பாடம் நடத்துகிறார்? விஜயகாந்த் ஆவேசம்
- IndiaGlitz, [Sunday,August 23 2020]
சமீபத்தில் ஆயுஷ் அமைச்சகத்தின் சார்பில் யோகா ஆன்லைன் வகுப்பு நடைபெற்றபோது அதில் கலந்து கொண்ட தமிழ் மருத்துவர்கள், ஆயுஷ் செயலர் ராஜேஷ் கொடேஜாவிடம் தங்களுக்கு இந்தி தெரியாததால் ஆங்கிலத்தில் பேசுமாறு கோரிக்கை விடுத்தனர். ஆனால் தனக்கு ஆங்கிலம் சரளமாக வராது என்றும் இந்தி தெரியாதவர்கள் வகுப்பில் இருந்து வெளியேறலாம் என்று கூறியதாக செய்தி பரவியது. இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்து இதுகுறித்து காரசாரமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆங்கிலம் தெரியாதவர் பாடம் நடத்த தகுதியற்றவர் என்று விஜயகாந்த் கூறிய முழு அறிக்கையின் விபரம் இதோ:
கடந்த 18-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் யோகா நேச்சுரோபதி மருத்துவர்களுக்கான யோகா பயிற்சி நடைபெற்றது. இதில், தமிழகத்தை சேர்ந்த 37 பேர் உட்பட நாடு முழுவதும் 350-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் போது ஆயுஷ் அமைச்சக செயலாளர் ராஜேஷ் கொடேஜா இந்தியில் பேசியதால், தமிழகத்தை சேர்ந்த மருத்துவர்கள் ஆங்கிலத்தில் உரையாற்றும்படி கோரியுள்ளனர். ஆனால், தனக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேசத் தெரியாது என்றும் இந்தி தெரியாதவர்கள் பயிற்சியில் இருந்து விலகிக் கொள்ளலாம். இந்தி தெரியாதவர்கள் வெளியேறலாம் என கூறிய மத்திய ஆயுஷ் அமைச்சக செயலாளர் ராஜேஷ் கொடேஜாவுக்கு கண்டனம்.
இந்தி தெரியாதவர்கள் வெளியேறலாம் என கூறிய செயலாளர், ஆங்கிலம் தெரியாமல் யோகா பயிற்சி நடத்த வந்தது ஏன்? ஆங்கிலம் தெரியாதுன்னு சொன்ன ஆயுஷ் அமைச்சக செயலாளர் ராஜேஷ் கொடேஜா பாடம் எடுக்க தகுதியற்றவர். மத்திய அரசு, உடனடியாக அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாமல் இருக்க மத்திய அரசிடம் தமிழக முதல்வர் கண்டனத்தை தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு விஜயகாந்த் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.