'தெறி', 'கபாலி' படங்களுக்கு வரிவிலக்கு கிடைப்பதில் சிக்கல்?
- IndiaGlitz, [Tuesday,March 01 2016]
கோலிவுட் திரையுலகில் தயாரான படங்களில் தமிழில் பெயர் வைத்த படங்கள் மற்றும் 'U'சர்டிபிகேட் பெற்ற படங்களை தேர்வு செய்து தமிழக அரசு 30% வரிவிலக்கு அளித்து வருகின்றது. இந்த வரிவிலக்கை பெறுவதற்காகவே பல படங்கள் தமிழில் பெயர் வைத்து வருகின்றன.
இந்நிலையில் இன்னும் ஒருசில மாதங்களுக்கு தமிழில் பெயர் வைத்தாலும், 'U'சர்டிபிகேட் பெற்றாலும் வரிவிலக்கு சலுகை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
தேர்தல் கமிஷன் அனேகமாக இந்த வாரம் தமிழக சட்டமன்ற தேர்தல் தேதியை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு தேர்தல் அறிவிப்பு வெளிவந்துவிட்டால் அதன்பின்னர் தேர்தல் நடைமுறை அமலுக்கு வந்துவிடும் என்பதால் எந்தவிதமான அரசு சலுகைகளும் வழங்கப்படாது. எனவே திரைப்படங்களுக்கு வழங்கப்பட்டு வரும் வரிச்சலுகையும் நிறுத்தப்படும். தேர்தல் முடிவடைந்து புதிய ஆட்சி பொறுப்பேற்ற பின்னர்தான் வரிச்சலுகைக்கு விண்ணப்பிக்க முடியும். எனவே தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே வரிச்சலுகையை பெற்றுவிட வேண்டும் என பல தயாரிப்பாளர்கள் தீவிர முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி விஜய் நடித்த 'தெறி' படம் ரிலீஸ் ஆகவுள்ளதால் இந்த படத்திற்கு வரிவிலக்கு சலுகை கிடைக்க வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது. அதேபோல் ரஜினியின் 'கபாலி' படத்திற்கும் வரிவிலக்கு கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.