மணிப்பூர், வேங்கை வயல், திருமாவளவன்.. அனல் பறந்த விஜய் பேச்சு..!
- IndiaGlitz, [Saturday,December 07 2024]
மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து, வேங்கை வயல் விவகாரத்தில் மாநில அரசை கண்டித்து, அம்பேத்கர் விழாவுக்கு கூட வர முடியாத நிலையில் திருமாவளவன் அழுத்தத்தில் இருக்கிறார் என ஒரே நிகழ்ச்சியில் பலமுனை தாக்குதல்களை நிகழ்த்திய விஜய்யின் பேச்சு சமூக ஊடகங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று சென்னையில் நடைபெற்ற அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் பேசிய அவர், மணிப்பூரில் என்ன நடக்கிறது என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதைப் பற்றிய எந்த கவலையும் இல்லாமல் ஒரு மத்திய அரசு இருக்கிறது என்று கூறி பாஜக அரசை விமர்சித்தார்.
அதேபோல், தமிழ்நாட்டில் வேங்கை வயல் என்ற பகுதியில் என்ன நடந்தது என்று எல்லோருக்கும் தெரியும். அந்த விஷயத்தில் ஒரு துரும்பை கூட கிள்ளாமல் நடவடிக்கை எடுக்காமல், வேடிக்கை பார்ப்பது தமிழக அரசு என்று தமிழக அரசையும் கடுமையாக விமர்சித்தார்.
இறுதியில், அம்பேத்கர் விழாவிற்கு வர முடியாத அளவுக்கு கூட்டணி கட்சிகளால் திருமாவளவன் மீது அழுத்தம் உள்ளது. ஆனால், அவர் மனம் முழுவதும் இந்த விழாவில் தான் இருக்கும் என்பதை என்னால் உணர முடிகிறது’ என்று கூறினார்.
ஒரே நேரத்தில் மத்திய அரசு, மாநில அரசு மற்றும் திமுக கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றை விமர்சித்தது, தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.