பெரியார் உள்பட தவெகவின் 5 கொள்கை தலைவர்கள் யார் யார்? தவெக மாநாட்டில் பேசிய விஜய்..!
- IndiaGlitz, [Sunday,October 27 2024]
அரசியலில் ஜெயிக்கணும்னா பலமான முதல் சக்தியை முதன்மை சக்தியாக இருக்கும். அதுக்கு நல்ல கொள்கைகள் தேவை. கொள்கைகள் தான் அரசியலுக்கான டிஸிப்ளின். அப்படியான அரசியல் பயணத்துக்கு துணையாகவும் வழிகாட்டியாகவும் எடுத்துக்கொள்ளும் ஒரு நல்ல தெளிவும் புரிதலும் இருக்க வேண்டும். அந்த தெளிவோடு புரிதலோடு நாம தேர்ந்தெடுத்த நமது கொள்கை தலைவர்கள்தான் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார், பச்சை தமிழன் பெருந்தலைவர் காமராஜர், அண்ணல் அம்பேத்கர், ராணி வேலு நாச்சியார், மக்கள் சேவகர் அஞ்சலை அம்மா, இவங்க அஞ்சு பேரும் எப்படி நம்ம கொள்கை தலைவர்களாக ஆனாங்க,எந்த அடிப்படையில் ஆனார்கள் என்பதை சொல்கிறேன்.
தந்தை பெரியார் பெரியார் என்றால் கடவுள் மறுப்பு கொள்கை மட்டும் தான் என ஒரு சிலர் பேசுவார்கள். நாம் அப்படி பேச மாட்டோம். எங்களுக்கும் கடவுள் நம்பிக்கை உண்டுங்கிறதையும் தெளிவாக இப்பவே அறிவிக்கிறோம். சர்வ மத பாதுகாப்புக்கும் சமய நம்பிக்கைகளுக்கும் அரணா இருக்கிறது தான் எங்களோட சமரசமற்ற அடிப்படையான ஆழமான நிலைப்பாடு. பெண் விடுதலை, பெண் கல்வி, பெண்கள் முன்னேற்றம், சமுதாய சீர்திருத்தம், சமூக நீதிப் போன்ற கொள்கைகளை முன்னெடுத்துச் செல்லும் காரணத்துக்காகவே தந்தை பெரியாரை எங்களின் அரசியல் வழிகாட்டி மற்றும் கொள்கை தலைவராக ஏற்க முடிவு செய்துள்ளோம்.
எங்களோட அடுத்த கொள்கை தலைவர் பெருந்தலைவர் காமராஜர். கல்விக்காகவும் தொழில் வளர்ச்சிக்காகவும் அந்த காலத்திலேயே யோசித்த உத்தமர் காமராஜர். மதச்சார்பின்மையை இந்த மண்ணில் ஆழமாக விதைத்ததில் அவருக்கும் பெரிய பங்கு உண்டு. இன்றைக்கும் நேர்மையான நிர்வாக செயல் திறனுக்கு ஒற்றை உதாரணமாக நிற்கிற ஒரே தலைவர் பெருந்தலைவர் காமராஜர் மட்டும்தான். அதனால பெருந்தலைவர் காமராஜர் நம் நிர்வாக செயல்முறை சித்தாந்தத்திற்கு வழிகாட்டி என்று தலை நிமிர்ந்து பெருமையோடு அறிவிக்கிறோம்.
நமது அடுத்த கொள்கை தலைவர் இந்திய துணை கண்டத்தின் அரசியல் சாசனத்தை உருவாக்கி காட்டிய சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர். சமூக நீதியை நிலை நாட்டியவர் என்பதால் அவரை எங்கள் கொள்கை தலைவராக அறிவிக்கிறோம் .
எங்களின் ஆகப்பெறும் அடுத்த வழிகாட்டி, இந்த தமிழ் மண்ணில் சிவகங்கை பகுதியை கட்டி ஆண்ட மாபெரும் பேரரசி பெண்ணரசி ராணி வேலு நாச்சியார். தன்னுடைய கணவரை இழந்த பிறகும் கூட கைம்பெண்ணாக வீட்டுக்குள்ளே முடங்கி கிடக்காம வாளேந்தி, வேளேந்தி இந்த மண்ணைக் காக்க போர்க்களம் புகுந்த வீர புரட்சியாளர். முதல் விடுதலைப் பெண் போராளிதான் நம்ம வேலு நாச்சியார். எதிரி எவ்வளவு வலிமையாய் இருந்தாலும் சரியான நேரம் பார்த்து இறங்கி அடிச்சா யாரா இருந்தாலும் ஜெயிக்கலாம் என்பதை அர்த்தத்தோடு சொன்னதுதான் அவங்க வாழ்க்கை . எல்லா சமூகங்களுடைய இணக்கமாக இருந்தது மட்டும் இல்லாம அந்த காலத்திலேயே இஸ்லாமிய சகோதரர்களோடவும் நல்லிணக்கத்தோடு இருந்தவர்.
அடுத்ததாக , முன்னேற துடிக்கிற சமூகத்தில் பிறந்து இந்த மண்ணில் இருக்கிற ஒட்டுமொத்த சமுதாய முன்னேற்றத்திற்கும் உழைத்த உன்னதமான போராளியான கடலூர் மாவட்டத்தை சேர்ந்த அஞ்சலை அம்மாளைத்தான் நம்முடைய இன்னொரு வழிகாட்டியா நாம தேர்ந்தெடுத்திருக்கிறோம். நிறைமாத கர்ப்பிணியாக இருந்தபோது கொஞ்சம் கூட யோசிக்காமல் பயமில்லாமல் போராட்டத்தில் கலந்து கொண்டு கைதானவர். சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவங்க. இதுவரைக்கும் பெண்களை கொள்கை தலைவர்களா வழிகாட்டியா எந்த அரசியல் இயக்கமும் அறிவித்ததில்லை. முதல் முறையாக அதில் முத்திரை பதிக்கிறது நமது தமிழக வெற்றி கழகம்.
மேற்கண்ட ஐந்து தலைவர்களையும் கொள்கை தலைவர்கள் மற்றும் வழிகாட்டிகளாக ஏற்று களமிறங்கும் தமிழக வெற்றிக்கழகம், தமிழக அரசியலில் வெற்றி யாக மாறி, கொள்கை வழியில் சமரசம் இல்லாமல் நின்று, தமிழ்நாட்டின் வெற்றிக்காக புதியதோர் விதி ஒன்றை புதுமையாய் படைப்போம். இவ்வாறு தவெக தலைவர் விஜய் பேசினார்.