அனிமேஷன் வீடியோவான விஜய் கூறிய குட்டிக்கதை: பிரபல நிறுவனத்தின் பிறந்த நாள் வாழ்த்து!

  • IndiaGlitz, [Tuesday,June 21 2022]

நாளை தளபதி விஜயின் பிறந்தநாள் கொண்டாட இருப்பதை அடுத்து அவருக்கு அவரது ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனம் விஜய்யின் பிறந்தநாளை ஒட்டி அவர் கூறிய குட்டி கதையை அனிமேஷன் வீடியோவாக உருவாக்கி வாழ்த்து தெரிவித்துள்ளது.

விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் ஒரு குட்டிக் கதையை கூறினார். அந்த கதையில் ’நம் எல்லோருடைய வாழ்க்கையும் ஒரு நதி போல் தான் இருக்கின்றது. நதி ஒரு இடத்திலிருந்து புறப்பட்டு அதனுடைய சொந்த பாதையில் சென்று கொண்டிருக்கும். அப்படி வரும்போது ஒரு இடத்தில் சிலர் விளக்குகளை ஏற்றி நதியை வணங்குவார்கள். நதி போய்க்கொண்டே இருக்கும். இன்னொரு இடத்தில் சில பேர் பூக்களைத் தூவி நதியை வரவேற்பார்கள். அப்போதும் நதி போய்க்கொண்டே இருக்கும். வேறொரு இடத்தில் நம்மை பிடிக்காத சில பேர் நதி மீது கல்லெறிந்து விளையாடுவார்கள். அதையும் பார்த்து நதி போய்க்கொண்டே இருக்கும்.

அந்த நதி மாதிரி தான் நம்முடைய வாழ்க்கையும். நாம் போகும் பாதையில் நம்மை வணங்குபவர்களும் இருப்பார்கள், நம்மை வரவேற்பவர்களும் இருப்பார்கள், நம்மை எதிர்ப்பவர்களும் இருப்பார்கள். ஆனால் நாம் நம்முடைய வேலையை, கடமையை செம்மையாக செய்து கொண்டு போய்க்கொண்டே இருக்கவேண்டும் என்று கூறியிருப்பார்.

இந்தக் கதைக்கு ஏற்ப அனிமேஷன் வீடியோவை 7ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்து வெளியிட்ட நிலையில் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.