மணம் முடிந்த கையோடு விஜய் சேதுபதியுடன் படப்பிடிப்பில் இணையும் பிரபல நடிகை!
- IndiaGlitz, [Friday,December 03 2021]
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் S.R. பிரபு தயாரிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “மாநகரம்“. இந்தத் திரைப்படம் விமர்சன ரீதியாக ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இதன் இந்தி ரீமேக்கில் நடிகர் விஜய்சேதுபதி நடிக்கிறார் என்பதும் அவருக்கு ஜோடியாக பிரபல நடிகை கத்ரினா கைஃப் நடிக்கவிருக்கிறார் என்பதும் போன்ற தகவல்கள் வெளியாகி இருந்தன.
“மெர்ரி கிறிஸ்துமஸ்“ எனப் பெயரிடப்பட்ட இந்தப் படத்தை “அந்தாதூன்“ பட இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கவிருக்கிறார். கொரோனா காரணமாக இதன் படப்பிடிப்பு தள்ளிப்போன நிலையில் தற்போது டிசம்பர் 15 ஆம் தேதி இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்ற தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.
இந்நிலையில் பாலிவுட் நடிகை கத்ரினா கைஃப் மற்றும் நடிகர் விக்கி கௌசால் திருமணம் ராஜஸ்தானில் உள்ள அரண்மனை ரிசார்டில் வரும் 9 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. 3 நாட்கள் நடைபெற இருக்கும் இந்த திருமண விழாவிற்கு பிறகு நடிகை கத்ரினா கைஃப் நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கவுள்ள “மெர்ரி கிறிஸ்துமஸ்“ படப்பிடிப்பில் கலந்து கொள்வார் எனக் கூறப்படுகிறது.
பாலிவுட் சினிமாவில் நடிகர் விஜய்சேதுபதி நடித்திருக்கும் “மும்பைகார்“ திரைப்படம் இந்த மாதம் ரிலீசாகவுள்ளது. இந்நிலையில் தற்போது “மெர்ரி கிறிஸ்துமஸ்“ படப்பிடிப்பில் கலந்துகொள்ள உள்ளார். மேலும் “காந்தி டாக்ஸ்“ எனும் திரைப்படத்திலும் அவர் நடிக்கவிருக்கிறார். தமிழில் இவர் நடித்த “கடைசி விவசாயி“ திரைப்படம் ரிலீஸாகவுள்ள நிலையில் தற்போது “காத்துவாக்குல ரெண்டு காதல்“, “மாமனிதன்“, “மைக்கேல்“, “விக்ரம்“, “யாதும் ஊரே யாவரும் கேளீர்“, “விடுதலை“ போன்ற படங்களில் அவர் இணைந்து நடித்து வருகிறார்.