'சர்கார்' பிரச்சனை: விஜய்க்கு ஆதரவளித்த விஜய்சேதுபதி
- IndiaGlitz, [Thursday,July 19 2018]
தளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் 'சர்கார்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த மாதம் வெளியானது. இந்த போஸ்டரில் விஜய் புகைபிடித்தவாறு போஸ் கொடுத்திருந்ததால் அன்புமணி உள்பட பல அரசியல்வாதிகள் விஜய்க்கும், சர்கார்' படக்குழுவினர்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றங்களில் நடந்து வருகிறது.
அதே நேரத்தில் விஜய்க்கு ஆதரவாகவும் டி.ராஜேந்தர் உள்பட சிலர் குரல் கொடுத்தனர். இந்த நிலையில் நேற்று 'ஜூங்கா' படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் விஜய்சேதுபதி இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:
1980-களில் சிகரெட் பிடிப்பதை மிகைப்படுத்திக் காட்டப்பட்டது போல் தற்போது யாரும் படாமாக்குவதில்லை. என் அப்பா சிகரெட் பிடிப்பதைப் பார்த்து நான் கற்கவில்லை. படங்களில் நடிகர்கள் சிகரெட் பிடிப்பதைப் பார்த்து நான் புகைப்பதில்லை
எனக்கும் புகைப் பிடிக்கும் பழக்கம் இருக்கிறது. விஜய் மட்டும்தான் படங்களில் சிகரெட் பிடிக்கிறாரா? ஏன் மற்ற நடிகர்கள் சிகரெட் பிடிப்பதில்லையா?. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பலரும் விளம்பரம் தேடிக் கொள்கின்றனர். சிகரெட் பிடிப்பது உடல் நலத்திற்கு கேடு என்பது அனைவருக்கும் தெரியும். இந்தப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வர நினைப்பவர்கள், சிகரெட் கம்பெனிக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.