பெரிய நடிகர்கள் நடிக்க வேண்டிய படத்தில் நான்: விஜய்சேதுபதி

  • IndiaGlitz, [Wednesday,July 18 2018]

நடிகர் விஜய்சேதுபதியின் நடிப்பும், அவர் ஏற்று நடிக்கும் கேரக்டரும் படிப்படியாக ஆச்சரியப்படுத்தி வரும் நிலையில் அவரது 25வது படமான 'சீதக்காதி' அவரது திரையுலக வாழ்வில் மறக்க முடியாத ஒரு படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

சமீபத்தில் வெளியான 'சீதக்காதி' படத்தின் மேக்கிங் வீடியோ, அவர் மேக்கப்புக்காக எந்த அளவுக்கு மெனக்கெட்டுள்ளார் என்பதை புரிய வைத்துள்ளது. சிவாஜி கணேசன், கமல்ஹாசன், விக்ரம் போன்றவர்கள் ஒரு கேரக்டருக்காக எவ்வளவு மெனக்கிடுவார்கள் என்பது தெரிந்ததே. அந்த வகையில் இந்த பட்டியலில் தற்போது விஜய்சேதுபதியும் இந்த படத்தின் மூலம் இணைந்துள்ளார்.

இந்த படம் குறித்து விஜய்சேதுபதி கூறியதாவது: 'சீதக்காதி' திரைப்படம் சிவாஜி கணேசன் அல்லது கமல்ஹாசன் போன்ற லெஜண்ட் நடிகர்களுக்கு பொருத்தமான ஒரு படம். ஆரம்பத்தில், பாலாஜி தரணீதரன் இந்த படத்தில் நடிக்க தமிழ் சினிமாவின் சில பெரிய நடிகர்களை நினைத்திருந்தார். ஆனால் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. கைகளில் வேறு எந்த ஆப்ஷனும் இல்லாமல், அவர் என்னை இந்த படத்தில் நடிக்க வைக்க விரும்பினார். இந்த படத்திற்கு செய்ய வேண்டியதை சரியாக செய்து உள்ளேன் என்று நான் நம்புகிறேன்.

நான் ஒரு 80 வயதான நாடக கலைஞனாக நடிக்கிறேன். 'சீதக்காதி' ஒரு ஆத்மார்த்தமான படம், அது கலைக்கு முடிவே இல்லை, சாகாவரம் பெற்றது என்ற செய்தியை சொல்லும். அது யாரோ ஒருவரின் அல்லது மற்றொருவரின் மூலம் வாழும். என் 25வது படமாக இந்த அற்புதமான படம் அமைவதற்கு நான் மிகவும் பாக்கியவானாக இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தை இயக்கிய பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கு கோவிந்த் மேனன் இசையமைக்கின்றார். இந்த படத்துக்கு சரஸ்காந்த் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.