ஒளிப்பதிவாளரை இயக்குனராக மாற்றிய விஜய்சேதுபதி
- IndiaGlitz, [Thursday,June 02 2016]
தமிழ் திரையுலகின் பிசியான நடிகரான விஜய்சேதுபதி நடிப்பது மட்டுமின்றி 'ஆரஞ்சு மிட்டாய்' படத்தின் மூலம் முதன்முதலாக தயாரிப்பாளர் ஆனார். இந்த படம் வசூல் ரீதியாக போதிய வரவேற்பை பெறவில்லை என்றாலும் விஜய்சேதுபதியின் வயதான கெட்டப் மற்றும் நடிப்பிற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்தது.
இந்நிலையில் தற்போது முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் 'மேற்கு தொடர்ச்சி மலை' என்ற படத்தை தயாரித்து வருகிறார். இசைஞானி இளையராஜா இசையில் லெனின் பாரதி இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மேலும் விஜய்சேதுபதி மூன்றாவதாக இன்னொரு படத்தை தயாரிக்கவுள்ளதாகவும் இந்த படத்தை பிரேம்குமார் என்பவர் இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இவர் 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தின் ஒளிப்பதிவாளர் என்பது குறிப்பிடத்தக்கது. தங்கர் பச்சான், கே.வி.ஆனந்த், ராஜீவ் மேனன் உள்ளிட்ட பல ஒளிப்பதிவாளர்கள் இயக்குனர் ஆகியுள்ள நிலையில் அந்த வரிசையில் பிரேம்குமாரும் இயக்குனர் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.