விஜய்சேதுபதி-கே.வி.ஆனந்த் இணைந்த 'கவண்'. திரை முன்னோட்டம்
- IndiaGlitz, [Tuesday,March 28 2017]
கோலிவுட் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான கே.வி.ஆனந்த் அவர்களும், வருடத்தில் மிக அதிக படங்களை ரிலீஸ் செய்யும் முன்னனி நடிகர்களில் ஒருவரான விஜய்சேதுபதியும் முதல்முறையாக இணைந்த 'கவண்' திரைப்படம் வரும் வெள்ளியன்று மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தில் டி.ராஜேந்தர் முக்கிய வேடம் ஏற்று இருப்பது கூடுதல் சிறப்பாக கருதப்படுகிறது.
கே.வி.ஆனந்த் கடந்த 2011ஆம் ஆண்டு இயக்கிய அரசியல் படம் 'கோ'. இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் கிட்டத்தட்ட அதே பாணியில் அரசியல் மற்றும் மீடியா கலந்த ஒரு கதையுடன் 'கவண்' வெளிவருகிறது என்பது சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரைலரில் இருந்து தெரியவந்தது.
இந்த படம் குறித்து இந்த படத்தின் திரைக்கதை ஆசிரியர்களில் ஒருவரான கபிலன் வைரமுத்து தனது சமூகவலைத்தளத்தில் சில நாட்களுக்கு முன்னர் கூறியபோது, ''கோ' படத்தில் பத்திரிகையாளர் கேரக்டர் வடிவில் போலி அரசியல்வாதிகள் மீதான கோபத்தை வெளிப்படுத்திய இயக்குனர் இந்த படத்திலும் தனது கோபத்தை 'கவண்' என்ற ஆயுதம் மூலம் வெளிப்படுத்த காத்திருப்பாதாக பதிவு இருந்ததே இந்த படம் குறித்து ஒரு நிலைக்கு நம்மால் வரமுடிகிறது.
இந்த படத்தில் விஜய்சேதுபதி தொலைக்காட்சி ஒன்றின் கேமிராமேனாகவும், மடோனா செபாஸ்டியன் நிருபராகவும், டி.ராஜேந்தர் அந்த சேனலின் உரிமையாளராகவும் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. மீடியாவுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களும், அவற்றின் வியாபார போட்டிகளையும் இந்த படம் தோலுரிக்கும் என்றும் அதே நேரத்தில் நேர்மையான மீடியாக்கள் படும் துன்பங்களையும் இந்த படம் வெட்டவெளிச்சமாக காண்பிப்பதாகவும் கூறப்படுகிறது.
பிரபல எழுத்தாளர்கள் சுபாவின் அனல் தெறிக்கும் வசனங்களுடன் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தில் இடம்பெற்றுள்ள 'ஆக்சிஜன்' என்று தொடங்கும் ஆதி பாடிய பாடல் சூப்பர் ஹிட் வெற்றி என்பது அனைத்து எப்.எம்களிலும் அடிக்கடி ஒலித்து கொண்டிருப்பதில் இருந்தே தெரிந்து கொள்ள முடியும். அதுமட்டுமின்றி அருண்காமராஜ் எழுதி, டி.ராஜேந்தர், ஆதி, மடோனா செபாஸ்டியன் ஆகியோர் பாடிய 'ஹேப்பி நியூ இயர்' பாடல் இந்த படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது ஏன் என்பது குறித்து டி.ராஜேந்தர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியபோது, 'கே.வி.ஆனந்த் என்னைத் தேடி வந்து கதை சொன்னார். முதலில் இதில் நடிப்பதற்கு நான் தயங்கினேன். அவர் கதை சொன்னவிதம் என்னை கவர்ந்தது. நான் வெளியில் யார் படத்திலும் நடிப்பது கிடையாது என்று அவரிடம் சொன்னேன். நீங்கதான் நடிக்கணும்னு பிடிவாதமாக இருந்தார். என்னுடைய கதாபாத்திரத்துக்கு வேறு யாரையாவது நடிக்க வைக்கலாமே என்றேன். ஆனால், அவரோ, உங்களோட மரியாதை கெட்டுடாம, உங்களுக்குன்னு ஒரு முழு சுதந்திரத்தை கொடுப்பேன். என் மேல நம்பிக்கை இருந்தா பண்ணுங்கன்னு சொன்னார். அப்படியொரு வார்த்தையை நான் இதுவரை எங்கேயும் கேட்டதில்லை. அவரது வார்த்தை எனக்கு ரொம்பவும் பிடிச்சது. இந்த வார்த்தைகாகவே இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்' என்று கூறினார்.
இந்த படத்தை மிக பிரமாண்டமான முறையில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதற்கு முன்னர் கே.வி.ஆனந்த் இயக்கிய 'மாற்றான்' மற்றும் 'அனேகன்' படங்களையும் இதே நிறுவனம்தான் தயாரித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு அபிநந்தன் ராமானுஜன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இவர் இதற்கு முன்னர் 'கவலை வேண்டாம்' படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் கே.வி.ஆனந்த் இயக்கிய அயன், கோ, மாற்றான், அனேகன் ஆகிய படங்களுக்கு எடிட்டிங் செய்த அந்தோணி இந்த படத்திற்கும் எடிட்டிங் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை தொடங்கும் சரியான நேரத்தில் இந்த படம் ரிலீஸ் ஆவது இந்த படத்தின் ஓப்பனிங் வசூலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தலா அரை டஜன் விஜய்சேதுபதி படங்கள் ரிலீஸ் ஆகி வரும் நிலையில் இந்த ஆண்டின் முதல் விஜய்சேதுபதி படமாக இந்த படம் வெளிவந்து அவருக்கு வெற்றியை தொடங்கி வைக்கும் வகையில் இருக்க நம்முடைய அட்வான்ஸ் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம். மேலும் இந்த படத்தின் விமர்சனத்தை வரும் வெள்ளியன்று பார்ப்போம்